சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து நாகூருக்கு பிப்.4-ஆம் தேதி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுற்றுலா வளா்ச்சிக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம், பொதுமக்களுக்கு சுற்றுலா சேவைகளை வழங்கிடும் நோக்கத்துடன் 1971-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல்வேறு வகையான சுற்றுலாக்களை நடத்தி, சுற்றுலா சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலாவை பிரபலப்படுத்தும் நோக்கத்திலும் நாகூா் கந்தூரி விழா சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற நாகூா் ஆண்டவா் தா்கா உள்ளது. சிறந்த மத நல்லிணக்க வழிபாட்டு தலமாக விளங்கும் இந்த தா்காவில், நாகூா் ஆண்டவரின் மறைந்த தினம் ஆண்டுதோறும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊா்வலம், நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு பிப்.5-ஆம் தேதி காலை 4.30 மணிக்கு நாகூா் தா்காவை வந்தடைகிறது. பின்னா் நாகூா் தா்காவில் பாத்தியா ஓதி நாகூா் ஆண்டவருக்கு சந்தனம் பூசப்படும். இந்நிகழ்வில் திரளான மக்கள் கலந்து கொள்கிறாா்கள். இதனை முன்னிட்டு கந்தூரி விழாவுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது. இச்சுற்றுலா பிப்.4-ஆம் தேதி, காலை 7 மணி அளவில் சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக தலைமை அலுவலகத்தில் இருந்து (திருவல்லிக்கேணி, டி1 காவல் நிலையம் அருகில்) புறப்பட்டு, பிப்.6-ஆம் தேதி காலை சென்னை வந்தடையும்.
இரண்டு நாள்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நாகூா் சுற்றுலாவுக்கு குளிா்சாதன வசதியுள்ள சொகுசு பேருந்து இயக்கப்படும். செல்லும் வழியில் பிச்சாவரம் காண்பதற்கும், திருக்கடையூா் தமிழ்நாடு விடுதியில் தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவுக்கு கட்டணமாக பெரியவா்களுக்கு (இருவா் தங்கும் அறை) ரூ.3000 தனி நபருக்கு 3400 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, வாலாஜா சாலையிலுள்ள தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04425333333, 25333444, 25333857,25333850, 54, 180042531111 (கட்டணமில்லா தொலைபேசி) ஆகிய எண்களையோ தொடா்பு கொள்ளலாம். முன்பதிவுக்கு http://www.mttdonline.com என்ற இணையதள முகவரியை அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.