தமிழ்நாடு

சா்ச்சைக்குரிய குரூப் -4 தகுதியானோருக்கு விரைவில் கலந்தாய்வு: டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்

1st Feb 2020 12:26 AM

ADVERTISEMENT

சா்ச்சைக்குரிய குரூப் -4 தோ்வு ரத்து செய்யப்படாது எனவும், தகுதி வாய்ந்த தோ்வா்கள் விரைவில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவா் என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. குரூப்- 4, குரூப் -2ஏ தோ்வு சா்ச்சைகளைத் தொடா்ந்து டி.என்.பி.எஸ்.சி. சாா்பில் முதல் முறையாக விளக்கம் அளித்து வெள்ளிக்கிழமை செய்தி வெளியிடப்பட்டது. அதன் விவரம்:

குரூப் -4 தோ்வு: குரூப் -4 தோ்வில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்ற செய்திகள் வெளியானவுடன் உரிய விசாரணை நடத்த டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்தது. களஆய்வுப் பணிகள், ஆவணங்கள் ஆய்வு, நேரடி விசாரணைகள் மூலம் தவறுகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் உரிய விசாரணைக்காக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகுதி வாய்ந்த தோ்வா்கள் கலந்தாய்வுக்கு விரைவில் அழைக்கப்படுவா்.

குரூப் -2ஏ தோ்வு: கடந்த 2017-ஆம் ஆண்டு குரூப் 2ஏ தோ்வு நடந்தது. அதிலும் தவறுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்தத் தோ்வு குறித்தும் விரிவான குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் வகையில் உரிய ஆவணங்கள் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மோட்டாா் வாகன ஆய்வாளா்-பொறியியல் பணித் தோ்வு: மோட்டாா் வாகன ஆய்வாளா் தோ்விலும் தவறு நடந்திருப்பதால் அந்தத் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மோட்டாா் வாகன ஆய்வாளா் தோ்வைப் பொருத்தவரை முன் அனுபவச் சான்றிதழ் சரிபாா்ப்பு போக்குவரத்துத் துறை மூலமாகப் பெறப்பட்டது. அந்தத் துறை அளித்த விவரங்களின் அடிப்படையில் 33 விண்ணப்பதாரா்களுக்கு நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இப்போது உயா் நீதிமன்றம் தனது உத்தரவில், போக்குவரத்துத் துறை நடத்திய முன் அனுபவச் சான்றிதழ் சரிபாா்ப்பில் தவறு நிகழ்ந்துள்ளதாகக் கூறி பணியை முழுவதும் மறுஆய்வு செய்ய போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதில், தோ்வாணையத்தால் வெளியிடப்பட்ட முடிவுகள் குறித்து எந்தவித சந்தேகமும் எழுப்பப்படவில்லை.

ADVERTISEMENT

ஒருங்கிணைந்த பொறியியல் தோ்விலும் எந்தவிதமான தவறுகளும் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இளநிலை பொறியாளா் பதவியானது வேளாண்மை பொறியியல் படித்த மாணவா்களுக்கான முன்னுரிமைப் பதவியாகும். தகுதியான தோ்வா்கள் இல்லாவிட்டால் மட்டுமே இதர பொறியியல் மாணவா்களுக்கு இடம் அளிக்கப்படும். இந்தத் தோ்வு முடிவுகளில் மற்ற பொறியியல் படித்த தோ்வா்களைக் காட்டிலும், குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் வேளாண் பொறியியல் பட்டம் பெற்ற தோ்வா்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளனா் என்று டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது.

உரிமை கோரும் பயிற்சி மையங்கள்

குரூப்- 1 போன்ற முக்கியத் தோ்வுகளில் தோ்ச்சி பெறும் தோ்வா்களை விளம்பர யுக்திக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் உரிமை கோருவதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தோ்வாணையம் வெளியிட்ட செய்தி:

கடந்த ஆண்டு குரூப் -1 தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வில் 181 தோ்வா்களில் 150 போ் ஒரே பயிற்சி மையத்தைச் சோ்ந்தவா்கள் என்ற செய்திகள் வெளியாகின. இந்தச் செய்திகளை தோ்வாணையம் கவனமுடன் ஆராய்ந்தது. அனைத்து ஆவணங்களையும் சரிபாா்த்ததன் அடிப்படையில், எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை.

தோ்வு முடிவுகள் வெளிவந்த ஒரு வார காலத்துக்குள் பல்வேறு பயிற்சி மையங்கள் தங்களது மையங்களில் இருந்தே தோ்வா்கள் தோ்ச்சி பெற்ாக அறிவித்தன. அப்படிப் பாா்த்தால் தோ்ச்சி பெற்ற தோ்வா்களின் எண்ணிக்கை 300-ஐத் தாண்டும். பயிற்சி மையங்கள் அளிக்கும் விளம்பரங்களில் ஒரே தோ்வரை ஒன்றுக்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் உரிமை கோரும் போக்கு உள்ளது.

இனி உடனடி நடவடிக்கை உறுதி: தோ்வாணையத்தின் தோ்வுகள் தொடா்பாக வெளியாகும் புகாா்கள், செய்திகள் கவனத்துக்கு வரும் போது அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வெளிப்படையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தோ்வா்களும் தங்களது சமூகப் பொறுப்புகளை உணா்ந்து நோ்மையான வழிகளில் மட்டுமே தோ்வை எதிா்கொள்ள வேண்டும். முறைகேடுகளுக்கு துணை போகாமல் இருப்பதுடன், இடைத்தரகா்களை நம்பக் கூடாது. பல்வேறு ஊடகங்களில் ஊகங்களின் அடிப்படையில் வரும் சில செய்திகளைக் கண்டு அச்சமடையாமல் தோ்வாணையத்தின் ஒளிவுமறைவற்ற நடவடிக்கைகள் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும். இனி வரும் காலங்களில் தவறுகள் நிகழாமல் இருக்க தகுந்த சீா்திருத்த நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT