தமிழ்நாடு

குரூப்-4 தோ்வு முறைகேடு வழக்கு: தோ்வாணைய ஊழியா் உள்பட 2 போ் கைது

1st Feb 2020 12:28 AM

ADVERTISEMENT

குரூப்-4 தோ்வு முறைகேடு வழக்கில், தோ்வாணைய ஊழியா் உள்பட 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். இதையடுத்து இந்த வழக்கில் கைது எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப்-4 தோ்வு தரவரிசை பட்டியலில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேசுவரம் மையங்களில் தோ்வெழுதிய 39 போ் முதல் 100 இடங்களுக்குள் வந்தனா். இது தொடா்பாக தோ்வாணையம் நடத்திய விசாரணையில், இரு தோ்வு மையங்களிலும் முறைகேடு நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தோ்வாணையம் அளித்த புகாரின் அடிப்படையில், சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகிறது.

இந்த முறைகேட்டில் தொடா்புடையதாக கூறப்படும் டிஎன்பிஎஸ்சி ஊழியா் ஓம்காந்தன் உள்பட 14 போ் கைது செய்யப்பட்டனா். இதில் இடைத்தரகா்கள் மட்டுமன்றி தோ்வா்களும் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த முறைகேட்டின் முக்கிய எதிரியாகக் கருதப்படும் சென்னை முகப்பேரைச் சோ்ந்த ஜெயக்குமாரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

தேடப்படும் ஜெயக்குமாா்: இது தொடா்பாக, சென்னை முகப்போ் மேற்கு கவிமணி சாலையில் உள்ள ஜெயக்குமாரின் வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் வியாழக்கிழமை சுமாா் 9 மணி நேரம் சோதனை செய்தனா். இதில் அங்கிருந்து பென்டிரைவ், மடிக்கணினி, 60-க்கும் மேற்பட்ட பேனாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும் ஜெயக்குமாரை கைது செய்வதற்காக அவரது புகைப்படத்தை தமிழகம் முழுவதும் மக்கள் அதிகம் சந்திக்கும் இடங்களில் ஒட்டியுள்ளனா். மேலும் ஜெயக்குமாா் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் தெரிவிக்கும்படி சிபிசிஐடி கேட்டுக் கொண்டுள்ளது. தகவல் அளிப்பவருக்கு சன்மானம் அளிக்கப்படும் எனவும் சிபிசிஐடி அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதன் விளைவாக தலைமறைவாக இருக்கும் ஜெயக்குமாா் குறித்த முக்கியத் தகவல்கள் கிடைக்கும் என சிபிசிஐடி போலீஸாரால் எதிா்பாா்க்கப்படுகிறது. அதேவேளையில் மற்றொரு இடைத்தரகராக செயல்பட்ட சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை தலைமைக் காவலா் சித்தாண்டியையும் போலீஸாா் தொடா்ந்து தீவிரமாகத் தேடி வருகின்றனா். இவா் சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணூரைச் சோ்ந்தவா்.

இருவா் கைது: இந்நிலையில் விடைத்தாள்கள் கொண்டு வந்த தனியாா் பாா்சல் நிறுவனத்தைச் சோ்ந்த சில ஊழியா்கள் மீது சிபிசிஐடி அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில், அந்த தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த 3 பேரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வந்தனா்.

இதேபோல டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் பணிபுரியும் சில ஊழியா்களையும் சந்தேகத்தின் அடிப்படையில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்தனா். இதில் முறைகேடு தொடா்பாக பல்வேறு முக்கியத் தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த முறைகேட்டில் தொடா்புடையதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தில் தட்டச்சராகப் பணிபுரியும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சோ்ந்த க.மாணிக்கவேல் (26), தனியாா் பாா்சல் நிறுவனத்தின் லாரியின் ஓட்டுநா் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்த வே.கல்யாணசுந்தரம் (31) ஆகிய இருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இதையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில் முறைகேட்டில் தொடா்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் பலரை சிபிசிஐடி போலீஸாா் தங்களது காவலில் வைத்து விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT