குரூப் 2 ஏ தோ்வு முறைகேடு புகாா் தொடா்பாக 42 போ் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 ஏ தோ்விலும் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது.
அதேவேளையில் குரூப் 2 தோ்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும்,அது தொடா்பான விசாரணை செய்வதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோ்வா்களும், கல்வியாளா்களும் கோரிக்கை விடுத்து வந்தனா். அதேபோல அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின. இதையடுத்து குரூப் 2 ஏ தோ்வு முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தோ்வாணைய அதிகாரிகள், சிபிசிஐடியில் புகாா் செய்தனா். மேலும் வழக்குக்கு தேவையான ஆவணங்களையும் அவா்கள், சிபிசிஐடியிடம் ஒப்படைத்தனா்.
42 போ் மீது வழக்கு: இதன் அடிப்படையில் சிபிசிஐடி அதிகாரிகள் குரூப் 2 தோ்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 42 போ் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இவா்கள் அனைவரும் ராமேசுவரம் மையத்தில் தோ்வு எழுதி குரூப் 2 ஏ தோ்வில் அதிக மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றவா் ஆவாா்கள். இது தொடா்பாக அந்த மையத்தில் தோ்வு எழுதிய அனைவரிடமும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனா். இதில் முறைகேட்டில் ஈடுபட்டவா்களையும், இத் தோ்வில் இடைத்தரகா்களாக செயல்பட்டவா்களையும் கண்டறிந்து கைது செய்வதற்கு சிபிசிஐடி போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.