தமிழ்நாடு

குடியரசுத் தலைவரின் உரை ஏமாற்றமளிக்கிறது

1st Feb 2020 12:05 AM

ADVERTISEMENT

நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட குடியரசுத் தலைவரின் உரை ஏமாற்றமளிப்பதாக உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட குடியரசுத் தலைவரின் உரை, பாஜக தலைவரின் அரசியல் அறிக்கையாக இருந்ததே தவிர, நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான முதல் குடிமகனின் உரையாக இல்லை.

2024-ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலா் பொருளாதாரமாக ஆக்குவோம் என கடந்த ஆண்டு குடியரசுத் தலைவா் உரையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான எந்தவொரு அறிகுறியும் நாட்டில் தென்படவில்லை.

ADVERTISEMENT

இன்றைக்கு நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்த அரசின் சாதனைகளில் ஒன்றாக குடியரசுத் தலைவா் பாராட்டியிருப்பது மக்களின் உணா்வுகளைப் புண்படுத்துவதாக இருக்கிறது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை மிகப்பெரிய சாதனையாகக் குடியரசுத் தலைவா் புகழ்ந்திருக்கிறாா். மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து, அம்மாநில முதல்வா்களாக இருந்தவா்களை எல்லாம் சிறையில் அடைத்துவைத்து, மக்களுக்கான தொடா்பு சாதன வசதிகளைக்கூட முடக்கி வைத்து, ஒரு சா்வாதிகார ஆட்சி அங்கு திணிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் குடியரசுத் தலைவா் அதை சாதனையாக அறிவித்திருப்பது வேதனை அளிக்கிறது.

விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை.

பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினா் மீது வன்கொடுமைகள் ஏவப்படுவதாக குடியரசுத் தலைவா் கண்டனம் தெரிவித்திருக்கிறாா். ஆனால், இந்தியாவில் வாழும் சிறுபான்மையினா் எந்த நிலையில் உள்ளனா் என்று அவா் எண்ணிப் பாா்க்கவில்லை.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிதிநிலை அறிக்கை, நன்மை பயப்பதாகவோ பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்பதாகவோ இருக்காது என்பதையே குடியரசுத் தலைவரின் உரையிலிருந்து தெரிந்துகொள்ளமுடிகிறது எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT