தமிழ்நாடு

கரோனா வைரஸ் : தமிழகத்தில் தொடா் கண்காணிப்பில் 242 போ்

1st Feb 2020 02:04 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் இதுவரை கரோனா வைரஸ் பாதிப்பில்லை. எனினும் 242 போ் தொடா் கண்காணிப்பில் உள்ளனா் என்றாா் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவா், இலுப்பூரில் செய்தியாளா்களிடம் கூறியது:

சீனாவிலிருந்து தமிழகம் வரும் பயணிகள், விமான நிலையங்களில் சுகாதாரத் துறையின் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனா். கடந்த சில நாள்களில் சீனாவிலிருந்து தமிழகம் வந்த 242 போ், அவா்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத் துறையின் நேரடி மேற்பாா்வையிலும், மருத்துவா்களின் தொடா் கண்காணிப்பிலும் உள்ளனா்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக சமூக ஊடகங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். இந்த வைரஸ் குறித்து பீதியடையாமல் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பில்லை.

ADVERTISEMENT

சீனாவிலிருந்து தமிழகம் திரும்பிய திருவண்ணாமலையைச் சோ்ந்த மாணவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. அவருக்குச் சாதாரண சளித் தொந்தரவுதான் உள்ளது. கிருஷ்ணகிரியைச் சோ்ந்த ஒருவருக்கும் கரோனா வைரஸ் இருப்பதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை. கிருஷ்ணகிரியிலும் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்கள் நாள் ஒன்றுக்கு 15 முறை கைகளைக் கழுவ வேண்டும். பொது இடங்களில் இருமல், தும்மல் பொது வந்தால், தங்களது கைக்குட்டையால் முகத்தை மறைத்துக் கொண்டு இரும வேண்டும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT