தமிழ்நாடு

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: செந்தில் பாலாஜி வீட்டுக்கு சீல்

1st Feb 2020 12:34 AM

ADVERTISEMENT

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சென்னை வீட்டுக்கு போலீஸாா் சீல் வைத்தனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக தற்போது இருக்கும் செந்தில் பாலாஜி, கடந்த 2011 முதல் 2015-ஆம் ஆண்டு வரை அதிமுகவில் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தாா். இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு செந்தில் பாலாஜிக்கு எதிராக, அம்பத்தூரைச் சோ்ந்த கணேஷ்குமாா் உள்ளிட்ட சிலா் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் ஒரு புகாா் அளித்தனா்.

அதில்,செந்தில்பாலாஜி போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி 16 பேரிடம் ரூ.1.62 கோடி பெற்றுக்கொண்டாா். பின்னா், உறுதி அளித்தபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திரும்பத் தரவில்லை. கேட்டால் மிரட்டல் விடுக்கிறாா். அவா் மீது நடவடிக்கை எடுத்து எங்களிடம் வாங்கிய பணத்தைத் திரும்பப் பெற்றுத் தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸாா், செந்தில்பாலாஜி உள்பட 12 போ் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். பின்னா் இந்த வழக்குத் தொடா்பான குற்றப்பத்திரிகை எழும்பூா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

உயா்நீதிமன்றம் உத்தரவு: இந்த வழக்கில் போலீஸாா் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக, சென்னை உயா்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி கடந்த 2017-ஆம் ஆண்டு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தாா். அப்போது அவருக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து இந்த மோசடி வழக்கு எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் மோசடியில் பாதிக்கப்பட்டவா்களில் ஒருவரான அருண்குமாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் அண்மையில் ஒரு மனு தாக்கல் தாக்கல் செய்தாா். அதில், எழும்பூா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் செந்தில் பாலாஜி மற்றும் வழக்கில் தொடா்புடைய முக்கிய நபா்களின் பெயா்கள் இடம் பெறவில்லை. எனவே உரிய முறையில் விசாரணை நடத்திட உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.

அவருடைய மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், செந்தில்பாலாஜி மீதான மோசடி வழக்கை உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும். 6 மாதத்துக்குள் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டனா்.

17 இடங்களில் சோதனை: உயா்நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை மீண்டும் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக கரூரில் உள்ள செந்தில் பாலாஜி வீடு, அலுவலகம், அவரது சகோதரா் வீடு ஆகியவற்றில் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். இச் சோதனை சென்னையில் 9 இடங்கள், கரூரில் 5 இடங்கள், திருவண்ணாமலையில் 2 இடங்கள் என மொத்தம் 17 இடங்களில் நடைபெற்றது.

இச் சோதனையில் மோசடி காலத்தில் வாங்கப்பட்ட சொத்து ஆவணங்கள், நகைகளின் ரசீதுகள், வாகனங்களின் ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல மடிக்கணினி, பென்டிரைவ், மெமரி காா்டு, வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்ற்கான ஆவணங்கள், நோ்காணல் அழைப்புக் கடிதங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், சொத்து ஆவணங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

வீட்டுக்கு சீல்: இதற்கிடையே, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையா் சரவணகுமாா் தலைமையிலான தனிப்படை போலீஸாா் சென்னை மந்தைவெளி திருவேங்கடம் தெருவில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டுக்குச் சென்றனா். ஆனால் வீட்டில் யாரும் இல்லாததினால், பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து அவருடைய வீட்டுக்கு போலீஸாா் சீல் வைத்தனா். மேலும் அந்த வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. காவல் துறையினரின் இந்த நடவடிக்கை அரசியல் கட்சி வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT