தமிழ்நாடு

திமுகவில் அடுத்து ஒரு வாரிசு!

1st Feb 2020 02:18 PM | - ஆர். முருகன்

ADVERTISEMENT

திமுகவில் அடுத்து ஒரு வாரிசு அரசியலுக்கு வருகிறார்.

அரசியல் கட்சிகளில் தலைவர்களின் வாரிசுகளும் பரவலாக அரசியலுக்கு வரத் தொடங்கி, ஆதிக்கமும் அதிகாரமும் செலுத்தத் தொடங்கிவிட்ட நிலையில் திமுகவில் மற்றொரு தலைவரின் வாரிசும் நேரடி அரசியலுக்கு வருகிறார்.   

திருச்சி மலைக்கோட்டை என்றாலே திமுகவில் இப்போது அசைக்க முடியாத சக்தியாக விளங்குபவர் கே.என். நேரு.

கருணாநிதி காலத்தில் அன்பில் தர்மலிங்கம், மலர்மன்னன், செல்வராஜ் ஆகியோர்தான் திமுகவின் அசைக்க முடியாத சக்திகளாக இருந்தனர். இப்போது திருச்சி திமுக-வின் முகமாக மாறியிருப்பது கே.என். நேரு. ஒருங்கிணைந்த மாவட்டச் செயலராக இருந்து, பிரிக்கப்பட்ட மாவட்டத்துக்கு மாவட்ட செயலராக மாறினாலும் திருச்சி மாவட்டத்தில் மட்டும் கே.என். நேரு தலைமையில் ஒரே மாவட்டம் என்ற நிலையேதான் இருந்து வந்தது. 

ADVERTISEMENT

வடக்கு மாவட்டச் செயலர் காடுவெட்டி தியாகராஜன், பெயரளவுக்கு மட்டுமே. செயல்பாடு முழுவதும் கே.என். நேருவாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில், திமுகவின் முதன்மைச் செயலராக பதவி உயர்வு பெற்றுள்ள கே.என். நேரு, இதுவரையிலும் தனக்குப் பிறகு அடுத்த வாரிசாகத் தனது மகனை க் கொண்டுவராமலேயே இருந்து வந்தார்.

கே.என்.நேருவின் மகன் அருணும் அரசியல் நிகழ்வுகளில் பங்கெடுக்காமல், தான் உண்டு, தனது வர்த்தகம் உண்டு என்ற வர்த்தக பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். 

இந்த நிலையில், முதன்முறையாகத் திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுக மாநாட்டில் அரசியல் கவனத்தை ஈர்த்தார் அருண். மாநாட்டு மேடையில் ஏறியவர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் காலில் விழுந்து ஆசி பெற்றார். மேலும், உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாநாட்டுக்கு வந்திருந்த கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்களுடன் கைகுலுக்கிப் பேசினார். 

இதையடுத்து கே.என். நேருவின் ஆதரவாளர்கள்,  மாநாட்டில் அருண் இடம் பெற்றிருந்த புகைப்படங்களைத் தொகுத்து, சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

முகநூல், சுட்டுரைகளில் மட்டுமல்லாது, ஆதரவாளர்கள் பலரும் இந்த விடியோ தொகுப்பைத் தங்களது நிலையாக வைத்துள்ளனர்.

இதனிடையே, திருச்சி மாவட்ட திமுகவை மூன்றாகப் பிரித்து காடுவெட்டி தியாகராஜனைச் செயலராகவும், லால்குடி  வைரமணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பொறுப்பாளர்களாகவும் திமுக அறிவித்திருக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT