தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: சமாதான கூட்டத்தில் ஆணையரின் உறுதியால் சாலை மறியல் ஒத்திவைப்பு

31st Dec 2020 04:23 PM

ADVERTISEMENT

 

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் சாலையைச் சரி செய்யப்படும் என ஆணையர் ஆர்.லதா உறுதியளித்ததால், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சாலை மறியல் தற்காலிகமாக கைவிடப்பட்டது. 

கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட 1ஆவது வார்டு கோரையார் வடக்குத் தெரு, ஆற்றங்கரைத் தெரு, நடுத்தெரு, தெற்குத் தெரு, வ.உ.சி.காலனி, அய்யன் தோட்டச்சேரி வடக்குத் தெரு உள்ளிட்ட தெருக்களில் ஆதிதிராவிடர்கள் அதிகம் வசிக்கக் கூடிய சாலைகள் பல ஆண்டுகளாக சேறும், சகதியுமாக உள்ளது. இச்சாலைகளை நகராட்சி நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து, தரம் உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்த இருந்தனர். 

தகவல் அறிந்த கூத்தாநல்லூர் வட்டாட்சியர் ஜீவானந்தம், சமாதானக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அதன்பேரில், வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் ஜீவானந்தம் தலைமையில், நகராட்சி ஆணையர் ஆர்.லதா, பொறியாளர் டி.ராஜகோபாலன், இளநிலை உதவியாளர் வி.ராஜேந்திரன் மற்றும்  சி.பி.ஐ.சார்பில், நகரச் செயலாளர் எம்.சுதர்ஸன், நகர செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மகேஸ்வரி, ஏ.பிச்சைமுத்து, வி.ராஜேந்திரன், கே.ராமதாஸ் மற்றும் நகர மன்ற முன்னாள் உறுப்பினர் எம்.சிவதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

ADVERTISEMENT

பேச்சு வார்த்தையில், ஆணையர் ஆர்.லதா, கோரையாறு வடக்குத்தெரு சாலையை ஜனவரி 20 ஆம் தேதிக்குள் சரி செய்யப்படும். பொதுக்கழிப்பிடங்கள் டெண்டர் விடப்பட்டு ஜனவரி 15ஆம் தேதிக்குப் பிறகு பணி மேற்கொள்ளப்படும். கோரையாறு பகுதியிலுள்ள வீடுகளுக்கு வீட்டுவரி பெற்று குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கோரையாறு ஆற்றங்கரையிலுள்ள மின்கம்பங்கள் மின்சார வாரியம் மூலம் மின் கம்பங்களைச் சரிசெய்து மின் இணைப்பு வழங்கப்படும் என உறுதியளித்தார். ஆணையரின் உத்தரவாதத்தின்படி, சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT