திருச்சி: கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் பேரூராட்சியில், பண்ணை வீடு பகுதியில், வாழை விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து வாழை, வெற்றிலை, கரும்பு விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது,விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கைகளை முன்வைத்து பேசியது: மேட்டூரில் 120 அடி தண்ணீர் இருந்தும், தொட்டியம் பகுதியில் ஜன 28 முதல் அடைப்புக்காலம் தொடங்கிவிடும். ஆண்டுப்பயிர் வாழையை, கொடிக்காலை காக்க தண்ணீர் திறக்க வேண்டும்.பூவும், பிஞ்சும் கருகிவருகிறது. கோடை காலத்திலும் தண்ணீர் திறக்க வேண்டும். காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்.
கோவில் நிலங்களை குத்தகை சாகுபடி விவசாயிகளின் வாரிசுக்கு பெயர் மாற்றம் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.
வாழையில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட ஒயின் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்.
சத்துணவு திட்டத்தில் உலர் வாழைப் பழத்தை சேர்க்க வேண்டும்.
வாழை காப்பீடு பிரீமியம் தொகையில் 50% அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து பேசினார்கள்.
மேலும் விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளை மனுவாக முதல்வரிடம் அளித்தனர்.
தொடர்ந்து முதல்வர் பேசுகையில், முசிறி தொகுதிக்குள்பட்ட பகுதியில் வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது. வாழை விவசாயிகளுக்கு வருவாய் ஏற்படுத்தும் வகையில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உடன் ஆலோசிக்கப்பட்டது. விரைவில் வாழை உற்பத்தி பொருள்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க ஐஐடி உடன் இணைந்து ஆராய்ச்சி தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் வாழை விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாக பெறுவர்.
மேலும் விவசாயத்திற்கு நீர் அதி முக்கியம் என்பதால் ஏரி குளங்கள் தூர்வாரப்பட்டு நல்ல நிலையில் நீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்திய தீருவோம் என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.