திருப்பூர் அருகே புதியதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட புதுப்பாளையத்தை அடுத்த வெங்கமேடு பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
எங்களது ஊரில் ஏற்கெனவே ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், தற்போது மீண்டும் ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கடையைத் திறக்க வேண்டாம் என்று ஏற்கெனவே ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வெங்கமேடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆகவே, வெங்கமேடு பகுதியில் புதியதாகத் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.