திருப்பூர் அருகே உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கடசி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூரை அடுத்த நெருப்பெரிச்சலில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறியதாவது:
திருப்பூரை அடுத்த நெருப்பெரிச்சல் கிராமத்தில் போக்குவரத்து வசதியில்லாத இடத்தில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் அவசர கதியில் கட்டப்பட்டுள்ளது.மேலும், திருப்பூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆன்லைன் ரசீதை மோசடி செய்து கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.
இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துகண்ணன், வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.