தேயிலைத் தோட்டம் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை அங்குத் தேயிலை பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளியைத் தாக்கி கொன்றது.
வால்பாறை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. பகல் நேரங்களிலேயே தேயிலைத் தோட்டங்களில் காணப்படுவதால் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் அச்சத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதன்கிழமை காலை வால்பாறையை அடுத்த நல்லகாத்து எஸ்டேட் முதல் டிவிசன் தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதி ஒட்டி அமைந்துள்ள தேயிலை செடிகளில் ஜெயமணி (56) என்ற பெண் தொழிலாளி தேயிலை பறித்துக்கொண்டிருந்தர்.
நன்பகல் 12.30 மணியளவில் அருகில் உள்ள வனத்திலிருந்து வந்த ஒரு யானை ஜெயமணியை தாக்கி மிதித்துக் கொன்றது. எஸ்டேட் நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஜெயமணியின் உடலை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.