என்னுடைய ஒரு கண் பிரதமர் நரேந்திர மோடி, இன்னொரு கண் ரஜினிகாந்த் என அறிவிக்கப்படாத ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி புதன்கிழமை தெரிவித்தார்.
ஜனவரியில் கட்சி தொடங்கப்படும், டிசம்பர் 31-இல் கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். ஆனால், உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
இந்த நிலையில் அறிவிக்கப்படாத ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜுன் மூர்த்தி புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியது:
தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் அவருக்கு மாற்றம் இல்லை. மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரிலேயே அவர் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார். தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய முடியாமல் போன மனஉளைச்சலில் அவர் இருக்கிறார். நமது உறவினர் ஒருவருக்கு நிகழ்ந்தால் எப்படி அணுகுவோமோ அப்படியே ரஜினியின் உடல்நிலையையும் அணுகி அவரது முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எனக்கு மோடி ஒரு கண், ரஜினி இன்னொரு கண். இருவரும் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள்.
என்னுடைய நிலைப்பாடு ரஜினியுடன் இருப்பதுவே."
முன்னதாக, அறிவிக்கப்படாத ரஜினி கட்சிக்கு மேற்பார்வையாளராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்ட தமிழருவி மணியன், அரசியலிலிருந்து விலகுவதாக புதன்கிழமை அறிவித்தார்.