தமிழ்நாடு

சனீஸ்வர பகவான் அவதரித்த திருக்கொடியலூரில் சனிப்பெயர்ச்சி விழா

27th Dec 2020 09:45 AM

ADVERTISEMENT


நன்னிலம்: சனீஸ்வர பகவான் அவதரித்த திருக்கொடியலூரில் சனிபெயர்ச்சி விழாவினையொட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சனி பரிகார ஹோமம், பாலாபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீமங்கள சனீஸ்வர பகவானுக்கு அதிகாலை சரியாக 5.22 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் பேரளம் அருகிலுள்ள திருக்கொடியலூரில் புகழ்பெற்ற ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஸ்ரீசூரிய பகவானுக்கும் சாயாதேவிக்கும், ஸ்ரீசனீஸ்வர பகவான் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த சனீஸ்வர பகவான் ஸ்ரீமங்கள சனீஸ்வர பகவான் என்ற  திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். சனீஸ்வரர் தோஷத்திலிருந்து விடுபட இந்திரனும் இந்த ஸ்தலத்தில் வழிபட்டதாக ஐதீகம். இவ்வாறு சிறப்புப் பெற்ற, இந்த ஸ்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் வைபவத்தையொட்டி, சனி பரிகார ஹோமங்கள் நடைபெற்றது. 

பின்னர் மஞ்சள் பொடி, மா பொடி, திரவியப் பொடி, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர் போன்ற அபிஷேக பொருள்களால் அபிஷேகமும், 108 லிட்டர் பசும்பால் கொண்டு சிறப்பு பாலாபிஷேகமும் நடைபெற்றது. இதன் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அனுக்கிரக மூர்த்தியான ஸ்ரீமங்கள சனீஸ்வர பகவானுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, சரியாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சரியாக 5.22 மணிக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது. 

சிறப்பாக நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழா பரிகார பூஜை, பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு மகா தீபாராதனையில் திரளான பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு, ஸ்ரீமங்களசனீஸ்வர பகவானை வழிபட்டனர். 

ADVERTISEMENT

சனிப்பெயர்ச்சி விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பா.தன்ராஜ், தக்கார் ப. மாதவன்,  மேலாளர் க. வள்ளிகந்தன் மற்றும் சிவாச்சாரியார்களும், கோவில் திருப்பணியாளர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர். கரோனா முன் தடுப்பு நடவடிக்கையாக, பக்தர்கள் தரிசிப்பதற்கு, சிறப்புத் தடுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டு, பக்தர்கள் எவ்வித சிரமமின்றி சுவாமியைத் தரிசனம் செய்தனர்.  

சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி தொடர்ந்து 48 நாள்களுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், 48 ஆவது நாள் சிறப்பு பரிகார ஹோமமும் நடைபெறும்.

Tags : sani peyarchi Tirukodiyalur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT