தமிழ்நாடு

தமிழகம் மாற்றத்துக்குத் தயாராகி விட்டது: கமல்ஹாசன்

27th Dec 2020 08:36 PM

ADVERTISEMENT


திருச்சி: தமிழகம் மாற்றத்துக்குத் தயாராகி விட்டதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான, 3ம் கட்ட பிரசாரத்தை, கமல்ஹாசன் திருச்சியில் தொடங்கினார். சிந்தாமணி அண்ணா சிலை அருகே பிரசாரத்தைத் தொடங்கி அவர் பேசியது:

"தமிழகத்தில் புதிய ஊழலற்ற ஆட்சியை உருவாக்க முடியும் என்று நீங்களும் நம்புவது, எனக்கு புரிகிறது. சில கூட்டங்களில், அமைச்சர்களே முன்னின்று ரூபாய் நோட்டுக்களை எண்ணிக் கொடுத்து கூட்டம் சேர்க்கின்றனர். ஆனால், இது நேர்மையாக சேரும் கூட்டம் என்று மேளம் கொட்டி, மார்தட்டி சொல்லிக் கொள்ளலாம்.

சினிமா நட்சத்திரம் வந்தால், கூட்டம் கூடும் என்று சிலர் பேசுகின்றனர். நான் இனிமேல், சினிமா நட்சத்திரம் அல்ல, உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடிய சிறு விளக்கு. அப்படித்தான் நான் இருக்க விரும்புகிறேன்.

ADVERTISEMENT

இந்த ஊழல் காற்றில் அந்த விளக்கு எரிந்து கொண்டேயிருக்க வேண்டிய எல்லா பாதுகாப்பையும் நீங்கள்தான், எனக்கு வழங்க வேண்டும். இந்த ஊழல் காற்று ஓய்ந்தே தீரும், இல்லாவிட்டால் ஓய்ப்போம். ஊர் கூடி தேர் இழுத்தால், நாளை நமதே,  நிச்சயம் நமதே.

தமிழகம் மாற்றத்துக்குத் தயாராகி விட்டது என்பதற்கு இங்கு கூடியுள்ள கூட்டமே சாட்சி. மக்கள் கூட்டம் திரண்டு வருகிறது, எல்லோருமே மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அரசியல் உங்கள் கடமை, ஓட்டு உங்கள் உரிமை. அதை, நல்லவர்களுக்கு போட வேண்டும். நல்ல ஆள் என்பதற்கான முதல் தகுதி, நேர்மையானவராகவும், உங்கள் கஷ்ட நஷ்டங்கள் புரிந்தவராகவும் இருக்க வேண்டும்.

நல்ல நதிகளை எல்லாம் சாக்கடையாகவும், ஆற்றுப் படுகைகளை எல்லாம் கொள்ளையடிக்கும் பேங்காகவும் வைத்திருப்பவர்கள் களையப்பட வேண்டும்.

அரை நூற்றாண்டுகளாக அவர்கள் செய்தவற்றை மாற்றும் பலம் உங்கள் கையில், முக்கியமாக இளைஞர்கள் கையில் இருக்கிறது. குறிப்பாக பெண்கள் நினைத்தால், அரசியல் மாற்றத்தை கொண்டு வர முடியும்" என்றார் கமல்.

இதைத் தொடர்ந்து, காட்டூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் கமல்ஹாசன் பங்கேற்றார்.

Tags : Kamal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT