தமிழ்நாடு

9 மாதங்களுக்குப் பிறகு கோவை குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

27th Dec 2020 04:27 PM

ADVERTISEMENT

கோவை: கரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று திறக்கப்பட்டது. இதனால் 1000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

கரோனா பரவல் காரணமாகக் கோவையில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால், போதிய நீர்வரத்து இருந்தும் கோவை குற்றாலத்துக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. கடந்த 20 நாட்களுக்கு முன்பு சுற்றுலாத்தலங்களில் கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இருப்பினும் வனப்பகுதியில் உள்ள கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில் வன விலங்குகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வந்தது. நீர்வீழ்ச்சி பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் இல்லாததை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

இதனையடுத்து 9 மாதங்களுக்குப் பிறகு இன்று கோவை குற்றாலம் திறக்கப்பட்டு உள்ளது. நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். நுழைவுவாயிலில் சுற்றுலாப்  பயணிகள் வெப்பநிலைமானியைக் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு முகக்கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

ADVERTISEMENT

முகக்கவசம் இல்லாமல் வருபவர்கள் டிக்கெட் கவுன்டரில் பணம் செலுத்தி முகக்கவசம் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாடிவயல் பகுதியில் இருந்து நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் வாகனத்தில் ஏறும் முன்பு பிளாஸ்டிக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை சுற்றுலா பயணிகள் எடுத்துச் செல்கிறார்களா என உடமைகள் பரிசோதிக்கப்படுகின்றன. நுழைவுவாயிலில் நீண்ட வரிசையில் தனிநபர் இடைவெளியுடன் நிறுத்தப்பட்டு 50 ரூபாய் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்ட பின்னர் பேருந்துக்கு 20 பேர் வீதம் சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி திறக்கப்பட்டுள்ள நிலையில் விடுமுறை தினமான இன்று கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் சுமார் 1000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிக்க சாடிவயல் பகுதியில் குவிந்து வருகின்றனர்.

Tags : கோவை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT