தமிழ்நாடு

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ யசோதா மறைவு பேரிழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம்

27th Dec 2020 03:05 PM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான டி.யசோதா மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதிக்காக டி.யசோதா பல்வேறு நலத்திட்டங்களை, போராடி மட்டுமல்ல எங்கள் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் உரிமையுடன் பெற்று நிறைவேற்றியவர் என்று மு.க.ஸ்டாலின் அவருக்கு புகழாரம் சூட்டினார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்ப்பேரவை உறுப்பினரும், என் அன்பிற்குரிய அக்காவுமான டி.யசோதா உடல் நலக்குறைவு காரணமாக திடீரென்று மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு மிகுந்த துயரமுற்றேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

ADVERTISEMENT

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலிருந்து 1980-இல் பேரவை உறுப்பினராகி, 1984, 2001, 2006 ஆகிய தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர். நான்கு முறை பேரவை உறுப்பினராக இருந்த அவரது குரல் நாட்டுப் பிரச்னைகளில், மாநிலப் பிரச்னைகளில், தொகுதி பிரச்னைகளில் முன்னணி வகித்த, பேரவையின் முக்கியக் குரலாகத் திகழ்ந்தது. 

கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த அவர் எங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் போல் பழகியவர்; பாசம் காட்டியவர். அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை பேரவையில் எதிரொலித்தவர். குடும்ப உறுப்பினர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும், ஆளும் கூட்டணி வரிசையில் இருந்தாலும் யசோதா அக்காவுக்கு தொகுதி மக்கள்தான் பிரதானம். அதைத்தாண்டி எதையும் சிந்திக்காதவர். அம்மக்களுக்காக உழைப்பதுதான் தனது வாழ்நாள் பணி என்பதில் இறுதி மூச்சுவரை உறுதியாக இருந்தவர். 

2006-இல் முதல்வர் கருணாநிதியிடமும், துணை முதல்வராக இருந்த என்னிடமும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்காக பல்வேறு நலத்திட்டங்களை, போராடியல்ல, எங்கள் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் உரிமையுடன் பெற்று நிறைவேற்றியவர். 

பேரவையில் இருந்த பெண் உறுப்பினர்களில், சாதனை வீராங்கனையாகத் திகழ்ந்த எனது பாசத்திற்குரிய அக்கா நம்மிடம் இன்று இல்லை என்பதை என் மனம் நினைத்துப் பார்க்கவே பதறுகிறது. டி.யசோதா மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு மட்டுமல்ல, அடித்தட்டு மக்களின் விழிப்புணர்வுக்காகவும், எழுச்சிக்காகவும் பாடுபட்டவர் என்ற முறையில் திராவிடப் பேரியக்கத்திற்கும் இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் இயக்கத்திற்கும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags : yashodas death stalin condolences
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT