காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ டி.யசோதா மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகியும், ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான டி.யசோதா கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் காலமானார்.
ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 4 முறை பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழக காங்கிரஸ் கட்சியில் மூத்த நிர்வாகியான டி.யசோதா கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் - என் அன்பிற்குரிய அக்காவுமான டி.யசோதா உடல் நலக்குறைவு காரணமாக திடீரென்று மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு மிகுந்த துயரமுற்றேன். அவரது மறைவிற்குத் திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டி.யசோதா அவர்களின் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு மட்டுமல்ல - அடித்தட்டு மக்களின் விழிப்புணர்வுக்காகவும், எழுச்சிக்காகவும் பாடுபட்டவர் என்ற முறையில் திராவிடப் பேரியக்கத்திற்கும் இழப்பு! அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் இயக்கத்திற்கும் - திருப்பெரும்புதூர் தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.யசோதா, மறைவுச்செய்தி, மிகுந்த வேதனையும் வருத்தமும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
ஓர் எளிய, வறிய குடும்பத்திலிருந்து வந்த அவர் காங்கிரஸ் இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு இறுதிவரை எளிய மக்களுக்காக சேவை செய்தவர்; அரசியலில் தன்னலம் கருதாமல் செயல்பட்டவர்; சமூகத்தின் அடித்தட்டு பகுதியிலிருந்து வந்த பெண்மணியான அவர், மக்கள் நலனை முன்னிறுத்தி செயலாற்றிய பெண் அரசியல்வாதிகளில் குறிப்பிடத்தக்கவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.