ஸ்டாலின் முதல்வராவது உறுதி என்று அருப்புக்கோட்டை தொகுதிக்குள்பட்ட இடங்களில் பரப்புரையில் ஈடுபட்ட திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை தி முக எம்.பி. கனிமொழி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் எனும் தலைப்பிலான திமுக தேர்தல் பரப்புரையின் படி ஞாயிற்றுக்கிழமை கனிமொழி எம்.பி.அருப்புக் கோட்டை தொகுதிக்குள்பட்ட இடங்களில் பரப்புரையில் ஈடுபட்டார். அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எம்.விஜயக்குமார், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ரமேஷ், முன்னாள் நகர் மன்றத் தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் சுப்பாராஜ்,நகரச் செயலாளர் ஏ.கே மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது பாலவநத்தத்தில் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி. கனிமொழி, பின்னர் புளியம்பட்டியில் விவசாயிகளுடனும், பாவடித் தோப்பில் கூலித் தொழிலாளர்களுடனும், கலந்துரையாடி குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது சாகுபடிக்கான தரமான விதைகள் நியாயமான விலையில் கிடைக்கவும், வனவிலங்குகளிடமிருந்து பயிர்களையும், விவசாயிகளின் உயிரையும் காத்திடவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். பின்னர், திருங்கையர்களின் குறைகளைக் கேட்டறிந்து, மாற்றுத்திறனாளி களுக்கு இலவச மிதிவண்டிகளையும் வழங்கினார். பின்னர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, காய்கறிச் சந்தையில் பெண்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். தொடர்ந்து பொதுமக்களிடையே பரப்புரையிலும் கனிமொழி எம்.பி. ஈடுபட்டார்.
அதையடுத்து பந்தல்குடியில் மகளிர் சுய உதவிக் குழு பெண்களிடம் கலந்துரையாடிய அவர், பத்திரகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், திமுகவின் வெற்றி நிச்சயிக்கப்பட்ட வெற்றி எனவும், மகளிர் சுய உதவிக் குழு திட்டம், 108 அவசர மீட்பு வாகனத் திட்டம் ஆகியவற்றைக் கொண்டு வந்தது திமுக எனவும், மொத்தம் 39 பாராளமன்றத் தொகுதிகளில் 38 வெற்றிகள் மூலம் திமுக மாபெரும் வெற்றி பெற்றது. ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி எனவும் பேசிய அவர், திமுக ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு புத்துணர்ச்சியாக புதிய திட்டங்கள் கொண்டு வரப்படுமெனவும் தெரிவித்த அவர், எதிர்க்கட்சிகள் கூறுவது போல ஸ்டாலினுக்கு பதவி வெறி இல்லை.
ஆனால் நீட் தேர்வு, இந்தித் திணிப்பு, விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் என மத்திய அரசின் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தட்டிக் கேட்காத அதிமுக அரசில் தான் பதவி வெறி உள்ளது எனப் பேசினார். உடன் ஒன்றியக் குழுத் தலைவர் சசிகலா, திமுக ஒன்றியச் செயலாளர்கள் பொன் ராஜ், பாலகணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் திரளான தொண்டர்களும் நேரில் கலந்துகொண்டனர்.