தமிழ்நாடு

புத்தாண்டு கொண்டாட்டம்: மதுபோதையில் அதிவேகமாக வாகனம் ஓட்டினால் சிறை

27th Dec 2020 07:36 AM

ADVERTISEMENT

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் மதுபோதையிலும் அதிவேகமாகவும் வாகனம் ஓட்டுவோரைக் கைது செய்து, சிறையில் அடைக்க சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது.

சென்னையில் சாலை விபத்துகளைக் குறைப்பதற்கு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, அண்மைக்காலமாக சென்னை காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு, சாலை விதிகளை மீறுவோா் மீது சமரசமின்றி வழக்குப்பதிவு செய்து வருகிறது.

புத்தாண்டு பிறக்கும் வியாழக்கிழமை நள்ளிரவு பொதுஇடங்களில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், அதற்கு முந்தைய நாள்களிலேயே புத்தாண்டு கொண்டாட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் நடத்துவதற்கு பலா் தயாராகி வருகின்றனா்.

368 இடங்களில் வாகனத் தணிக்கை:

ADVERTISEMENT

சாலைகளில், வாகனங்களில் அதிவேகமாக செல்லுதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்ற அத்துமீறல்கள் அதிகமாக நடைபெறலாம் என காவல்துறை கணித்துள்ளது. இதனால் வழக்கத்தை விட கூடுதலாக சுமாா் 368 இடங்களில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட உள்ளனா்.

மேலும், 162 இடங்களில் போக்குவரத்து போலீஸாரின் வாகன சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. 241 முக்கிய சந்திப்புகளில் அதிவேக வாகன ஓட்டிகளை தடுக்கும் வகையில் அதிக திறன் கொண்ட ஒளி விளக்குகள் அமைக்கப்படுகின்றன. அண்ணாசாலை, காமராஜா் சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ்காந்தி சாலை, ஆற்காடு சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜி.என்.டி. சாலை உள்ளிட்ட நகரின் பிரதான சாலைகளில் போலீஸாா் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.

மீறினால் சிறை: இது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு உயா் அதிகாரி கூறியது:

உயிரிழப்பு ஏற்படும் சாலை விபத்துகளில் 73.7 சதவீதம் வாகன ஓட்டுநா்களின் தவறுகளால் ஏற்படுவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது. ஓட்டுநா்கள் வாகனத்தை அதிவேகமாக ஓட்டுவதினால் 47.9 சதவீதமும், அலட்சியம், முந்திச் செல்லுதல் போன்றவற்றால் 41 சதவீதமும், மது போதையின் காரணமாக 2.6 சதவீதமும் விபத்துகள் நேரிடுவதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை தெரிவிக்கிறது.

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, இத்தகைய விதிமீறல் அதிகம் ஏற்படக் கூடும்.

இதைக் கருத்தில் கொண்டு சென்னையில் அதிவேகமாக வாகனம் ஓட்டினாலும், மதுபோதையில் வாகனம் ஓட்டினாலும் கைது செய்து, சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளோம்.

சம்பந்தப்பட்ட நபா்கள் மீது போக்குவரத்துச் சட்டங்களின் கீழ் மட்டுமல்லாமல் இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கை புத்தாண்டு வரை தீவிரமாக அமல்படுத்தப்படும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT