தமிழ்நாடு

ஈமு கோழிப்பண்ணை நடத்தி ரூ.3 கோடி மோசடி: பெண் காவலர் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை 

18th Dec 2020 04:43 PM

ADVERTISEMENT

 

ஈரோட்டில் ஈமு கோழி பண்ணை நடத்தி கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் ரூ.3 கோடியே 42 லட்சத்து 8 ஆயிரத்து 100 ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பெண் காவலர் மற்றும் கணவர் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், ஜோதி நகர், ஸ்ரீ பத்ம ராம் நிவாஸ் என்ற முகவரியில் வசித்து வந்தவர் வெள்ளியங்கிரி. அவருடைய மகன் கார்த்திக் சங்கர், மனைவி காயத்ரி ஸ்ரீ் கார்த்திக், மற்றும் சபின் கண்ணா ஆகியோர் ஈமு கோழிப் பண்ணையை கோபிசெட்டிபாளையத்தில்  நடத்திவந்தனர். 

பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்களை ஊடகத்தின் மூலமாக வெளியிட்டனர். இதைப் பார்த்த பொதுமக்கள் அதிக லாபம் கிடைக்கும் என்ற நோக்கில் திட்டத்தில் சேர்ந்தனர். ரூ.2 லட்சம் பணம் கட்டினால் செட் அமைத்து கொடுத்து 20 ஈமு கோழிகள் வழங்கி தீவனம், மருந்து கொடுத்து மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக ரூ.7 ஆயிரமும் வருட முடிவில் ஊக்கத்தொகையாக ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும். இதேபோல 5-க்கும் மேற்பட்ட திட்டங்களை அறிவித்தனர். 

ADVERTISEMENT

இதை நம்பி 73 முதலீட்டாளர்கள் தலா ரூ.2 லட்சம் வீதம் பணத்தை கட்டினர். ஒரு வருட முடிவில் 3 பேரும் தலைமறைவாயினர். ஈரோடு மாவட்டம் பவானி எல்லமலை, சின்ன புலியூரை சேர்ந்த வெங்கடேசன் (28), இவர் கடந்த 28. 7. 2012- ல் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் 73 முதலீட்டாளர்களிடம் ரூ.3 கோடியே 42 லட்சத்து 8 ஆயிரத்து 100 ரூபாயை ஏமாற்றிவிட்டு பெண் காவலராக பணியாற்றக்கூடிய காயத்ரி ஸ்ரீ கார்த்திக், கணவர் கார்த்திக் சங்கர் மற்றும் சபின் கன்னா ஆகியோர் தலைமறைவாகி விட்டதாக அதில் குறிப்பிட்டிருந்தார். 
குற்றப்பிரிவு காவல்துறையனிர் 120b, 406, 420 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 11. 10. 2012-ல் 3  பேரையும் கைது செய்து, பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றம் செய்து கொடுத்தனர். 8.2. 2014 -ல் 3 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 5 12 2014 -ல் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரணை முடிந்து இன்று கோவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி இன்று தீர்ப்பு வழங்கினார். 

இதில் பெண் காவலர் மற்றும் கணவர் உள்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.2 கோடியே 15 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். குற்றவாளிகள் 3 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். அவர்களை காவலர்கள் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT