தமிழ்நாடு

தூய தமிழ்ப் பற்றாளர் பரிசுப் போட்டிமொழிப் புலமையை வெளிப்படுத்திய மாணவர்கள்

15th Dec 2020 06:56 AM

ADVERTISEMENT


சென்னை: தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில் தூய தமிழ்ப் பற்றாளர் பரிசுப் போட்டி சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. 

இதில் உலகெங்கும் உள்ள மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்று தங்களது மொழிப் புலமையை வெளிப்படுத்தினர். 

அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில் ஆண்டுதோறும் "தமிழ் அகராதியியல் நாள்' கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தூய தமிழ்ப் பற்றாளர் பரிசுப் போட்டி நடத்தப்படுகிறது. 

பொதுமக்கள், இளைஞர்களிடையே தூய தமிழ் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்தப் போட்டியின் நோக்கமாகும். அந்த வகையில் நிகழாண்டுக்கான பரிசுப் போட்டி சென்னையில் உள்ள செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தில் அதன் இயக்குநர் தங்க.காமராசு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.  

ADVERTISEMENT

இந்தப் போட்டிக்கு, உலகம் முழுவதிலும் இருந்து மாணவர்கள் உள்பட ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். போட்டியாளர்களிடம் நடுவர்கள், செல்லிடப்பேசி மூலமாக ஒலிபெருக்கி வசதியுடன் நேர்காணல் செய்தனர். நடுவர்கள் ஆங்கிலத்திலும், பிறமொழிகளையும் கலந்து பேசினாலும், போட்டியாளர்கள் தூய தமிழிலேயே பேசி தங்களது மொழிப் புலமையை வெளிப்படுத்தினர். குறிப்பாக மாணவ, மாணவிகள் இயல்பாகவே தூய தமிழில் பேசி அனைவரையும் கவர்ந்தனர்.

இதையடுத்து மதிப்பெண் அடிப்படையில் மூன்று வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு,  அவர்களுக்கு வரும் பிப்.7- ஆம் தேதி நடைபெறும் "தமிழ் அகராதியியல் நாள்' விழாவில் தமிழக அமைச்சர்கள் பரிசுகளை வழங்கவுள்ளனர்.  

முன்னதாக வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் செய்தித் தாள்கள், ஊடகங்கள் மூலமாக அறிவிக்கப்படும். 
தூய தமிழ்ப் பற்றாளர் பரிசுப் போட்டியின் நடுவர்களாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை துணைச் செயலர் மாணிக்கம் கஸ்தூரி,  மொழிபெயர்ப்புத் துறை துணை இயக்குநர் ந.திருச்செல்வன், அகரமுதலித் திட்ட இயக்ககத் தொகுப்பாளர்கள் ஜெ.சாந்தி, வே.கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT