தமிழ்நாடு

மெரினா: தள்ளுவண்டி கடைகள் அமைக்கும் பணி 3 மாதத்தில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

14th Dec 2020 03:29 PM

ADVERTISEMENT

 

மெரீனா கடற்கரையில் தள்ளுவண்டி கடைகள் அமைப்பதற்கான அனுமதி வழங்குவதில் வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெரீனா கடற்கரையில் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கில் தள்ளுவண்டி கடைகள் அமைப்பது குறித்து கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை இரண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்குவது தொடர்பாக  சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, மெரீனா கடற்கரைக்கு 3 மாதங்களுக்குள் 900 தள்ளுவண்டி கடைகளை அமைத்து கொடுக்கவில்லை என்றால் தனியார் நிறுவனங்களின் ஒப்பந்த தொகையிலிருந்து 50 சதவீத தொகையைச் சென்னை மாநகராட்சி வசூலிக்கலாம் என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு வினீத் கோத்தாரி, எம்.எஸ் ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனையை பின்பற்றி தங்களால் கடைகளை உரிய நேரத்தில் ஒப்படைக்க முடியாத நிலையில் உள்ளதால், கடைகள் விநியோகிக்கும் ஒப்பந்தத்திலிருந்து தாங்கள் விலகிக் கொள்வதாக ஒரு நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது மற்றொரு நிறுவனமான ஏக்வாட் நிறுவனம், நீதிமன்ற நிபந்தனையைப் பின்பற்றி மூன்று மாதத்தில் 900 தள்ளுவண்டி கடைகளை விநியோகிக்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தது.  

ADVERTISEMENT

அப்போது மாநகராட்சி  சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் எஸ்.ஆர் ராஜகோபால், புதிதாக அமைக்கப்பட உள்ள 900 தள்ளுவண்டி கடைகளைப் பொருத்தவரை, ஏற்கனவே மெரீனாவில் தொழில் செய்பவர்களுக்கு 60 சதவீதமும், புதிதாகக் கடை வைக்க விரும்புபவர்களுக்கு 40 சதவீதமும் பிரித்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மெரீனாவில் 2 முதல் 3 கடைகளை வைத்திருப்பவர்களை முறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 

கடைகள் அமைக்க விரும்புபவர்களுக்கான விண்ணப்பம்  வரும் டிசம்பர் 21-ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. வரும் 2021 ஜனவரி 6-ஆம் தேதி விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு பின்னர் குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு நடைபெறும் எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தள்ளுவண்டி கடைகள் விநியோகிப்பதற்கான உரிமையை ஏக்வாட் நிறுவனத்துக்கே முழுவதுமாக வழங்க  உத்தரவிட்டார். ஒரு மாதத்தில் 300 கடைகள் வீதம், மூன்று மாதத்துக்குள் 900 கடைகளையும் விநியோகிக்கச் செய்ய வேண்டும்.

கடைகள் அமைப்பதற்கான அனுமதி வழங்குவதில் வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே உள்ள கடைகளை அப்புறப்படுத்துவதிலும் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT