தமிழ்நாடு

தினமணி இணையதளச் செய்தி எதிரொலி: வாழப்பாடியில் சாலை பராமரிப்பு

12th Dec 2020 03:38 PM

ADVERTISEMENT

 

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த கடலுார் சாலை பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக சிதிலமடைந்து கிடப்பது குறித்து தினமணி இணையதளத்தில், படத்துடன் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறையினர் தார் ஜல்லி கலவையைக் கொட்டி சாலையை தற்காலிகமாகச் சீரமைத்து உள்ளனர். 

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய மையமாக விளங்கி வருகிறது. கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளுக்காகச் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் வாழப்பாடிக்கு வந்து செல்கின்றனர்.

அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்கள், லாரி, டெம்போ போன்ற சரக்கு வாகனங்கள் மற்றும் வேன், கார்கள் உட்பட வாழப்பாடிக்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. வாழப்பாடியில், பேருந்து நிலையம், பெரும்பாலான அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள், வணிக வளாகங்கள், கடைவீதி, தினசரி சந்தை, பயணியர் மாளிகை, தபால்நிலையம், வேளாண் விற்பனை நிலையம், காவல்நிலையம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஆகியவை, கடலுார் நெடுஞ்சாலையிலேயே அமைந்துள்ளன.

ADVERTISEMENT

தனியார் மருத்துவமனை அருகே, தார் ஜல்லி கலவை கொட்டி சீரமைக்கப்பட்ட  சாலை.

இதனால், சேலம்–சென்னன இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் போது, வாழப்பாடியில் ஏற்கனவே பயன்பாட்டிலிருந்து வந்த கடலுார் சாலையை விரிவுபடுத்தாமல், முத்தம்பட்டியில் இருந்து மத்துார் வரையிலான 4 கி.மீ., துாரத்திற்கு இருவழி புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த கடலுார் சாலை இன்றளவிலும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது.

ஆனால், இச்சாலையை தேசிய நெடுஞ்சாலைத்துறை முறையாக பராமரிக்காமல் கிடப்பில் போட்டுள்ளது. இதனால், முத்தம்பட்டி பிரிவுரோடு, பேருந்துநிலையம், காவல்நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக சிதிலமடைந்து போனது. மழை பெய்யும் போது சேறும் சகதியுமாக மாறி கிடக்கும் இச்சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள், பயணிகள் மற்றும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகினர்.

எனவே, வாழப்பாடியில் குண்டும் குழியுமாக படுமோசமாக சிதிலமடைந்து கிடக்கும் கடலுார் சாலையைப் புதுப்பிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாழப்பாடி பகுதி பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது. 

இதுகுறித்து டிசம்பர் 9ல் தினமணி இணையதளத்தில் படத்துடன் விரிவான செய்தி வெளியானது. இதனை அடுத்து கடலூர் சாலையில் காணப்பட்ட குழிகளுக்கு ஜல்லி கலவையை கொட்டி தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தற்காலிகமாக சீரமைத்து உள்ளனர். இருப்பினும், முத்தம்பட்டியில் இருந்து, மத்தூர் வரையிலான, ஏறக்குறைய 4 கிலோமீட்டர் கடலூர் தார் சாலையை விரிவுபடுத்தி முழுமையாக புதுப்பிக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பயணிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT