தமிழ்நாடு

டிச.10-ல் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்

5th Dec 2020 09:37 PM

ADVERTISEMENT

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி டிச.10ஆம் தேதி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், விவசாயிகளின் நிலங்களைக் கார்ப்பரேட்டுகள் பறித்துக்கொள்ளும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கால் நூற்றாண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதாரம் சரிவை சந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில் விவசாயத்துறை மட்டும்தான் சற்றே வளர்ச்சியைக் காட்டுகிறது. அந்தத் துறையையும் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கவே இந்த சட்டங்களை மோடி அரசு கொண்டுவந்துள்ளது. 
மோடி அரசின் இந்த சட்டங்களுக்கு எதிராகக் கடுமையான குளிரிலும் கடந்த 9 நாள்களாக சற்றும் உறுதிகுலையாமல் வீரியம் குன்றாமல் தொடர்ச்சியாக போராடும் விவசாயிகளைத் தேசத்துக்கு எதிரான தீவிரவாதிகள் என அவதூறு செய்யும் இழிசெயலில் சங்கப் பரிவாரங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் தில்லி போராட்டத்தை ஆதரித்தும் டிசம்பர்- 5ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும்
கறுப்புக்கொடி போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. அதனை விசிக சார்பில் வரவேற்று வாழ்த்துகிறோம். 
அத்துடன், தில்லியில் போராடும் விவசாய அமைப்புகள் எதிர்வரும் 8ஆம் தேதி இந்தியா முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளன. அப்போராட்டம் வெற்றிகரமாக அமைவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், விவசாயிகளின் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த டெல்லி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும்
எதிர்வரும் டிச.10ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

Tags : Thol Thirumavalavan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT