திருவாரூர்: வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுகிற வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா முத்தரசன் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட முத்தரசன் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
அப்போது முத்தரசன் அளித்த பேட்டி:
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் உரிய விவாதம் இல்லாமல் விவசாய விரோத சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் நாடு முழுவதும் 9 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகத்திலும் ஒருவாரத்திற்கு மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ரயில் மறியல், பஸ் மறியல், அரசு அலுவலகங்கள் முற்றுகை நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுகிற வரை இந்த போராட்டம் தொடரும். தமிழக முதல்வர் தான் ஒரு விவசாயி என்று சொல்லி வருகிறார். எனவே அவர் விவசாயத்தை பாதிக்கக்கூடிய வகையில் இயற்றப்பட்டுள்ள வேளாண் சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் போக்கை கைவிட்டு, சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று முத்தரசன் கூறினார்.