கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில், மின்சார வாரியத்துடன் 3 கிராம மக்கள் இணைந்து, ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கருவேல முட்களை வெட்டி, மின் இணைப்பு வழங்கப்பட்டது.
கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கடும் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால், வயல்கள் உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் நிரம்பியும், தேங்கியும் உள்ளது. இதன் விளைவால் மின் இணைப்பும் துண்டிக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மின்சார ஊழியர்கள் கஜா புயலில் இரவு, பகல் பார்க்காமல் உழைத்தது போலவே, இந்த மழையிலும் போராடி மின் இணைப்புகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், கூத்தாநல்லூர் நகராட்சிக்கு உள்பட்ட 5 ஆவது வார்டு மேலபனங்காட்டாங்குடி, கீழப்பனங்காட்டாங்குடி மற்றும் பூதமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட வக்ராநல்லூர் கோட்டகம் உள்ளிட்ட 3 கிராமங்களுக்கு மின்சாரம் செல்லக் கூடிய, மின் கம்பங்கள், வயலிலும், நீர் நிலை நிறைந்த இடங்களிலும் இருந்துள்ளது. தொடர் கன மழையால், இந்த இடங்களில் மழைத் தண்ணீர் நிரம்பியுள்ளன. மேலும், கருவேல முட்களும் வளர்ந்து காடு போல காட்சியளித்துள்ளது. 450 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின் இணைப்பு இல்லாமல் இருளில் இருந்தனர்.
3 கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்குவதற்காக, மின்சார வாரிய மின்பாதை ஆய்வாளர் ஜார்ஜ் தலைமையில், கம்பியாளர்கள் குமார், சுரேஷ், உதவியாளர்கள் அன்பு, முருகானந்தம் மற்றும் சாரதி உள்ளிட்டோர், வெள்ளிக்கிழமை இரவு 3 மணி வரை முயற்சித்துள்ளனர். கழுத்தளவிற்கு தண்ணீரும், கருவேல முட்களும் இருந்ததால், மேற்கொண்டு செயல்பட முடியவில்லை. தொடர்ந்து, சனிக்கிழமை 3 கிராம மக்களின் உதவியை நாடியுள்ளனர். உடன், சண்முகவேல், துரைமுருகன், மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோர் பயிற்சி பள்ளி நிறுவனர் முருகையன், ரமேஷ், முரளி உள்ளிட்ட 3 கிராமத்திலிருந்தும் 70 க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.
கொட்டும் மழையிலும், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு, 6 மணி நேரம் தொடர்ந்து கருவேல முட்களை வெட்டி, அகற்றினர். அதைத் தொடர்ந்து, மதியம் 3 மணியளவில், மேலப்பனங்காட்டாங்குடி, கீழப்பனங்காட்டாங்குடி மற்றும் கோட்டகம் உள்ளிட்ட 3 கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டன. கொட்டும் மழையில், 6 மணி நேரம் போராடி, ஒரு கிலோ மீட்டர் தூரத்திலான முட்புதர்களை வெட்டி, மின் இணைப்பு வழங்க உதவியாக இருந்த கிராம மக்களையும், மின்சார வாரிய ஊழியர்களையும் கிராம மக்கள் பாராட்டினர்.