ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு அதிமுக நகரச் செயலாளர் சக்திவேல் பாண்டியன் தலைமையில் மெளன ஊர்வலம் சென்ற நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்.
அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு நகர, ஒன்றிய அதிமுகவினர் சார்பில் சனிக்கிழமை மெளன ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அருப்புக்கோட்டையில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற மெளன ஊர்வலத்திற்கு அதிமுக நகரச் செயலாளர் சக்திவேல் பாண்டியன் தலைமை வகித்தார். வெள்ளைக்கோட்டை பகுதி காமராசர் சிலை முன்பாகத் தொடங்கிய இவ்வூர்வலத்தில் முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் யோக வாசுதேவன், பொதுக்குழு உறுப்பினர் வீரசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது அதிமுக நிர்வாகிகளுடன் கட்சித்தொண்டர்கள் அதிமுக கொடியேந்தியும்,ஜெயலலிதா நினைவுப் பதாகைகளை ஏந்தியும் மெளன ஊர்வலமாகச் சென்றனர். நகரின் முக்கியப்பகுதிகளான சொக்கநாதசுவாமி கோவில்,திருச்சுழி சாலை, அகமுடையர் மகால் வழியாக அண்ணாசிலைவரை சென்று மெளன ஊர்வலம் நிறைவடைந்தது. பின்னர் அண்ணாசிலை முன்பாக வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் 3 நிமிடநேரம் மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து சக்திவேல் பாண்டியன் மற்றும் யோகவாசுதேவன் ஆகியோர் பொதுமக்களுக்கும்,தொண்டர்களுக்கும் அன்னதானம் வழங்கினர். உடன் இந்நிகழ்ச்சியில் கருப்பசாமி, ஒன்றியச்செயலாளர்கள் சங்கரலிங்கம், வெங்கடேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும்,மேலும் தொண்டர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.