மத்திய மண்டல ஐஜி ஜெயராமன் தகவல்
டெல்டா மாவட்டத்தில் எல்லா காவல் நிலைய காவல்துறையினரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர் என்று திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜெயராமன் தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் இருந்து ஆலாலசுந்தரம் செல்லும் கிராம சாலை குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருப்பதை திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜெயராமன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்..
டெல்டா பகுதியில் உள்ள அனைத்து காவல் நிலைய காவல்துறையினரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் 1200 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தண்ணீர் புகுந்தால் திடீரென தாழ்வான பகுதியில் உள்ளவர்களை மேடான பகுதிக்குச் சென்று வரும் வகையில் அவர்களை அழைத்து வர மற்ற துறையுடன் இணைந்து செயல்படுவதற்காக மேலும் 1200 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேரிடர் மீட்புப் படையினரும் 15 குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களும் தயார் நிலையில் உள்ளனர். தீயணைப்பு படையினரும் பாதுகாப்புப் படையினரும் தொடர்ந்து தயார் நிலையில் உள்ளனர். நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் உள்ள 4000 பேர் தாழ்வான பகுதியிலிருந்து அழைத்து வரப்பட்டு மேடான பகுதியில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
காவல்துறையினர் இரவு பகல் எந்த நேரமும் தயார் நிலையில் உள்ளனர்.பொதுமக்கள் அவசர உதவிக்கு எந்த நேரமும் காவல்துறையைத் தொடர்பு கொள்ளலாம் என்றார். மயிலாடுதுறை எஸ்பி ஸ்ரீ நாதா, டிஎஸ்பி சரவணன், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கராஜன், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.