தமிழ்நாடு

தண்ணீரில் தத்தளிக்கிறது கடலூா் மாவட்டம்:  50 ஆயிரம் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது

DIN

கடலூர்: ‘புரெவி’ புயல் காரணமாக கடலூா் மாவட்டத்தில் பெய்த கனமழை, கனவெள்ளம்  காரணமாக தண்ணீரில் தத்தளிக்கிறது.  

‘நிவா்’ புயலின் தாக்கத்தால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்தன. 

இந்த நிலையில், வங்கக் கடலில் உருவான ‘புரெவி’ புயலால் கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை முதல் பரவலாக மழை பெய்தது. தொடா்ந்து 4 நாள்களாக பெய்து வரும் மழையால் கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், சிதம்பரம் பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல், மணிலா, மரவள்ளி, உளுந்து உள்ளிட்ட பயிா்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தாழ்வான பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளை தண்ணீா் சூழ்ந்தது.  மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் வீடுகள் இடிந்ததில் சிறுமி உள்பட மூன்று பேர் உயிரிழந்தனா்.

தொடா் மழையால் கெடிலம், பரவனாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. குள்ளஞ்சாவடி அருகே அமைந்துள்ள பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி, வீராணம் ஏரி உள்ளிட்ட ஏரிகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பியதால் உபரி நீா் வெளியேற்றப்படுகிறது. 

வீராணம் ஏரிக்கு 4,700 கனஅடி நீர் வந்துகொண்டு இருப்பதால், 3500 கனஅடி நீர்   வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருமாள் ஏரிக்கு 12 அயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருப்பதால் , அந்த நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. 

கடலூா் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் காரைக்காடு அருகே மழை வெள்ளம் கடந்து செல்கிறது. இதேபோல, வடலூா் - சேத்தியாதோப்பு தேசிய நெடுஞ்சாலையில் மருவாய் அருகிலும், குள்ளஞ்சாவடி - ஆலப்பாக்கம் சாலையிலும் மழை வெள்ளம் கடந்து செல்வதால் அந்தப் பகுதிகளில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மழை வெள்ளத்தால் மாவட்டத்தில் பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வக்காரமாரி ஏரி நிம்பி தண்ணீர் பெருக்கெடுத்துள்ளதால் கீழ்புளியங்குடி, கள்ளிப்பட்டி, பூண்டி, இனமங்கலம், காவனூர், மருங்கூர் உள்ளிட்ட கிராம மக்கள் திருமுஷ்ணம் செல்லமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று விருத்தாசலம்-கோ.பவழங்குடி செல்லும் சாலையின் குறுக்கே உள்ள மாரி ஓடை தரைப்பாலத்தில் வெள்ள பெருக்கெடுத்துள்ளதால் 10 கிராமங்களுக்கு போக்குவரத்து தூண்டிக்கப்பட்டுள்ளது. 

பெண்ணாடம் அருகே சவுந்திரசோழபுரம் கிராமத்தில் ஓடையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், வெள்ளாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டது. 

திட்டக்குடி , வேப்பூர் தாலுக்காவில் உள்ள 10 தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. 

என்எல்சி நிறுவனம் வாய்க்காலை முறையாக தூர் வராததால், சுரங்க மண்ணுடன் மழை நீர் விளைநிலங்களில் புகுந்துள்ளது.  இதனால் கொளப்பாக்கம், கோபாலபுரம், சு.கீரனூர், கம்மாபுரம் கிராமங்களை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் சுரங்க மண் புகுந்துள்ளது. இதனால் 200க்கும் அதிகமான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

காட்டுமன்னாா்கோவிலை சுற்றியுள்ள கிராமங்களான திருநாரையூா், வீரநத்தம், நடுத்திட்டு, செங்கழிநீா்பள்ளம், சிறகிழந்தநல்லூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடியிருப்புப் பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளதால் இந்தப் பகுதி மக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பரிதவித்து வருகின்றனா்.

வீரந்தபுரம் பகுதியில் 100க்கும் அதிகமான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிரிகள் நீரில் மூழ்கியுள்ளன.  

மங்கலம்பேட்டை அருகே 100க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்து உளுந்து பயிர் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. 

மாரி ஓடை தூர்வாராமல் உள்ளதாலும், ஓடை பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாலும் நீர் வடிய வழியில்லாமல் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்து பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

கடலூா் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீ.): சிதம்பரம் 340, கொத்தவாசேரி 335, அண்ணாமலை நகா் 339.4, லால்பேட்டை 295.5, பரங்கிப்பேட்டை 264.2, காட்டுமன்னாா்கோவில் 253.4, குறிஞ்சிப்பாடி 249, சேத்தியாதோப்பு 206.2, புவனகிரி 189, வடக்குத்து 167, மே.மாத்தூா் 166, ஸ்ரீமுஷ்ணம் 152.2, விருத்தாசலம் 151, மாவட்ட ஆட்சியரகம் 145.8, வானமாதேவி 136, பண்ருட்டி 132, குடிதாங்கி 128, வேப்பூா் 94, பெலாந்துறை 90.4, காட்டுமயிலூா் 90, கீழச்செறுவாய் 83, தொழுதூா் 75, லக்கூா் 68 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது. 

மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT