கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான கர்நாடக மாநில பாஜக அரசு மராட்டிய மேம்பாட்டு ஆணையத்திற்கு ரூ.50 கோடி நிதி கொடுப்பதற்கு கர்நாடக மாநில காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மராட்டிய மேம்பாட்டு ஆணையம் அமைப்பதன் மூலம் கர்நாடக மாநில பாஜக அரசு பிரித்தாளும் சூழ்ச்சி மேற்கொண்டுள்ளதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இன்று மாநிலம் தழுவிய பந்த் அழைப்பு விடுத்துள்ளன. இதன் காரணமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனை சாவடியில் சரக்கு லாரி உள்ளிட்ட வாகனங்கள் கர்நாடக மாநிலம் செல்வதற்கு அனுமதிக்கப்படாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூர், சாம்ராஜ்நகர், கொள்ளேகால் உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழக அரசு பேருந்துகள் இன்று காலை முதல் இயக்கப்படவில்லை. பண்ணாரி சோதனைச்சாவடி வழியாக கர்நாடக மாநிலம் செல்வதற்காக வந்த சரக்கு லாரிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி லாரி ஓட்டுநர்களுக்கு கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் பந்த் குறித்து அறிவுறுத்தி திரும்பிச் செல்லுமாறு கூறினர்.
இதன் காரணமாக பண்ணாரி சோதனை சாவடியில் 500க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் பந்த் காரணமாக சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலம் செல்ல வாகனங்கள் அனுமதிக்கப் படாததால் பண்ணாரி சோதனை சாவடி பகுதியில் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.