தமிழ்நாடு

அரியலூர் மாவட்டத்தில் தொடர் மழை: சம்பா பயிர்கள் மூழ்கின, பொதுமக்கள் சாலை மறியல்

DIN

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் சம்பா பயிர்கள் மூழ்கின. மேலும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் பொது மக்கள் அவதிக்குள்ளாகினர்.

புரெவி புயல் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது.வெள்ளிக்கிழமை இடைவிடாமல் பெய்த மழையால் அரியலூரில் பகுதியிலுள்ள சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் மழை நீர் தேங்கியது.

அரியலூர் நகர் பகுதியான மார்க்கெட்,வெள்ளாளத் தெரு,ராஜாஜி நகர், புதுமார்க்கெட்,கல்லூரி சாலை,செந்துறை சாலை,திருச்சி சாலைகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் கரைபுரண்டு ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

முடிக்கொண்டான் பகுதியில் மழைநீரில் மூழ்கியுள்ள சம்பா பயிர்கள்.


இதே போல் திருமானூர், கீழப்பழுவூர், தா.பழூர், ஜயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, செந்துறை,  பொன்பரப்பி, தளவாய் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. இடைவிடாமல் பெய்த மழையால் மாவட்ட முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மேலும் மாவட்டத்தில் பெரும்பாலன பகுதிகளில் அவ்வப்போது மின்தடையும் ஏற்பட்டு வருகிறது.

குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழைநீர்... திருமானூர் அடுத்த வெற்றியூர் கிராமத்திலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால்,பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளனர்.

இதே போல் ஜயங்கொண்டத்தில், சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் சாலையோரத்திள்ள கடைகள், குடியிருப்பு பகுதிகளில் சூழந்ததது. குறிப்பாக விநாயகர் நகர், மலங்கான் குடியிருப்பு வாசிகள் வெளியே வரமுடியாமல் வீட்டுக்குளேள முடங்கி கிடந்தனர். வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினர்.

தொடர் மழையில் நந்தையார் வாய்க்கால் மதகு உடைப்பு

வெள்ளாற்று தரைப்பாலம் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டது. அரியலூர் - கடலூர் மாவட்ட மக்களை இணைக்கும் வெள்ளாற்றின் குறுக்கே, கோட்டைக்காடு - செளந்திரசோழபுரம் இடையே அமைக்கப்பட்ட தாற்காலிக தரைப்பாலம் மழைநீரால் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இரு மாவட்ட மக்கள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சம்பா பயிர் மூழ்கின.... தொடர் மழையினால் திருமானூர், ஏலாக்குறிச்சி, காமரசவல்லி, தா.பழூர்,கூத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்துள்ள சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

மக்காச்சோளம் பயிர்கள் சேதம்... தொடர் மழையின் காரணமாக செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மானவாரி பயிர்களான மக்காச்சோள பயிர்கள் அடியோடு சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

முடிக்கொண்டான் பகுதிகளில் சாகுபடி செய்துள்ள சம்பா பயிர்கள் மூழ்கியதையடுத்து , தஞ்சாவூர்-அரியலூர் சாலையில் மறியலில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.

பொது மக்கள் சாலை மறியல்... தொடர் மழையின் காரணமாக திருமானூர் அடுத்த முடிக்கொண்டான் பகுதிகளில் சாகுபடி செய்துள்ள சம்பா பயிர்கள் மூழ்கியதையடுத்து அப்பகுதி மக்கள் தஞ்சாவூர் - அரியலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், வரத்து வாய்க்கால்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி,தூர்வார வேண்டும்.மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.தகவலறிந்து வந்த திருமானுர் போலீஸôர், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்துச் சென்றனர்.

நந்தையார் வாய்க்கால் மதகு உடைப்பு... அரியலூர் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக, குலமாணிக்கம் அடுத்த செம்பியக்குடி கிராமத்தில் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள நந்தையார் வாய்க்காலின் முதல் மதகு உடைப்பு ஏற்பட்டு, மழைநீர் அங்குள்ள வயல்களில் புகுந்தது. அதனால் சாகுபடி பயிர்கள் மூழ்கின. தகவலறிந்த வந்த அதிகாரிகள் மணல் மூட்டைகளை கொண்டு உடைப்பை அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT