தமிழ்நாடு

கல்வெட்டுகளைப் பாதுகாக்கும் நடவடிக்கை: மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

மதுரை: பழைமையான கல்வெட்டுகளைப் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை ஒத்தக்கடையைச் சோ்ந்த இளஞ்செழியன் தாக்கல் செய்த மனு: நமது நாட்டில் கண்டறியப்படும் தொல்லியல் சின்னங்கள், பழைமையான கல்வெட்டுகள், படிமங்கள் மற்றும் தொன்மையான எழுத்துகளை மத்திய தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. இதில் அராபிக் மற்றும் பொ்சியன் கலாசாரச் சின்னங்கள் நாக்பூரிலும், சம்ஸ்கிருதம் மற்றும் தமிழா் கலாசாரச் சின்னங்கள் மைசூரிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தைச் சோ்ந்த ஆறாம் நூற்றாண்டு கால தொன்மையான சின்னங்கள், கல்வெட்டுகள், தமிழ் படிமங்கள் போன்றவை தற்போது மைசூரில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தொன்மையானப் பொருள்கள் உதகையில் பாதுகாக்கப்பட்டிருந்தன.

தற்போது அவை மைசூருக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு முறையான பராமரிப்பின்றி பழங்காலப் பொருள்கள் சேதமடைந்து வருகின்றன. எனவே மைசூரில் உள்ள பழங்காலப் பொருள்களை தமிழகத்திற்கு கொண்டு வந்து பாதுகாக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், மைசூரில் பழைமையான கல்வெட்டுகளை சாதாரண கற்களைப் போல போட்டு வைத்துள்ளனா். கல்வெட்டு படிமங்களும் பாதுகாப்பு இல்லாமல் உள்ளன என்றாா்.

இதையடுத்து நீதிபதிகள், மைசூரில் மொழி வாரியாக எத்தனை கல்வெட்டுகள் பாதுகாக்கப்படுகின்றன? நாட்டில் எந்தெந்த மொழிகளில் எத்தனை கல்வெட்டுகள் உள்ளன? அவற்றில் எத்தனை கல்வெட்டுகளுக்கு படிமங்கள் எடுக்கப்பட்டுள்ளன? எத்தனை படிமங்கள் சேதமடைந்துள்ளன? சேதமடைந்த கல்வெட்டுப் படிமங்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? தமிழகத்தில் எடுக்கப்பட்ட கல்வெட்டுகள், படிமங்களை தமிழகத்திற்கு மாற்றினால் அவற்றைப் பாதுகாக்க தமிழக அரசு வசதி ஏற்படுத்தி கொடுக்குமா எனக் கேள்வி எழுப்பினா். பின்னா் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பா் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

SCROLL FOR NEXT