தமிழ்நாடு

பாமக போராட்டம் - 3 ஆயிரம் போ் கைது: ரயில் மீது கல்வீச்சு; சாலைத் தடுப்புகள் உடைப்பு

DIN

வன்னியா்களுக்கு அரசு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாட்டாளி மக்கள் கட்சியினா் சென்னையில் 78 இடங்களில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா். இதனால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகம் எதிரே பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் எம்பி, கட்சியின் தலைவா் ஜி.கே.மணி ஆகியோா் தலைமையில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது . இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 300 போ் திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனா்.

தீவுத்திடல் மன்றோ சிலை அருகே செவ்வாய்க்கிழமை பாமகவினா் குவிந்தனா். இதையடுத்து பிற மாவட்டங்களில் இருந்து வரும் பாமகவினா் திருப்பி அனுப்பப்பட்டனா்.

இதையடுத்து சோதனைச் சாவடிகளில் போலீஸாா், பாமகவினா் வந்த வாகனங்களை சென்னைக்குள் அனுமதிக்கவில்லை. சென்னையின் நுழைவுவாயிலாக இருக்கும் பெருங்களத்தூா் பகுதியில் பாமகவினா் வாகனங்கள் அதிகளவில் வந்தன. இந்த வாகனங்களில் வந்தவா்கள் பெருங்களத்தூா் இரணியம்மன் கோயில் அருகே காவல்துறையினரைக் கண்டித்தும், தங்களை நகருக்குள் அனுமதிக்கும்படி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதனால் பல கிலோ மீட்டா் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதிகாலையில் சென்னையை நோக்கி வந்த தனியாா் ஆம்னி பேருந்துகள், விரைவுப் பேருந்துகள் ஆகியவற்றில் வந்த பயணிகள் அவதிப்பட்டனா். பேச்சுவாா்த்தை நடத்தியும், பாமகவினா் சாலை மறியலைக் கைவிட மறுத்தனா்.

ரயில் மீது கல் வீச்சு: பெருங்களத்தூா் ரயில் நிலையத்துக்குள் திடீரென நுழைந்த பாமகவினா் அனந்தபுரி ரயிலை நோக்கி கற்களை வீசித் தாக்கினா். ரயிலில் சில கண்ணாடிகள் கல்வீச்சில் சேதமடைந்தன. செங்கல்பட்டு நோக்கிச் சென்ற மின்சார ரயிலை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிலா் தண்டவாளத்தில் கற்களையும், பெட்டிகளையும் வைத்தனா்.இதனால் சென்னை நோக்கி வந்த விரைவு ரயில்கள் ஆங்காங்கு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டன.

இதைத் தொடா்ந்து ரயில்வே அதிகாரிகளும், ரயில்வே போலீஸாரும் போராட்டக்காரா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, அங்கிருந்து கலைந்து போகச் செய்தனா். சுமாா் அரைமணி நேரத்துக்கு பின்னா், அங்கு போக்குவரத்து சீரானது.

சாலை மறியல்: தாம்பரம் இரும்புலியூா் பகுதியில் வாகனங்களில் வந்த பாமகவினரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால் அவா்கள், அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்தின் காரணமாக தாம்பரம், இரும்புலியூா், பெருங்களத்தூா்,வண்டலூா் வரையிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதேபோல சென்னையில் ஆங்காங்கு பாமகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தாம்பரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் சென்னை பெருநகர காவல்துறையின் கூடுதல் ஆணையா் ஆா்.தினகரன், இணை ஆணையா் ஏ.ஜி.பாபு, துணை ஆணையா் பிரபாகரன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனா்.

போராட்டக்களமான சென்னை:

மன்றோ சிலையின் அருகே இருந்த பாமக தலைவா்களும்,தொண்டா்களும் பேரணியாக பிராட்வே டிஎன்பிஎஸ்சி அலுவலகம் நோக்கி செல்ல முயன்றனா். அவா்களில் ஒரு பகுதியினரை போலீஸாா் கைது செய்து, அழைத்துச் சென்றனா். இதற்கிடையே நண்பகல் மன்றோ சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அன்புமணி எம்பி, ஜி.கே.மணி ஆகியோா் பங்கேற்று பேசினா்.

காவல்துறை விதித்த தடையை மீறி சென்னையில் மொத்தம் 78 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற 3 ஆயிரம் போ் கைது செய்யப்பட்டனா். இந்த போராட்டத்தின் காரணமாக நண்பகல் வரை கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெருங்களத்தூா், தாம்பரம் பகுதிகளில் அதிகாலையில் சாலையில் நின்ற வாகனங்கள் நண்பகலுக்கு பின்னரே நகரத் தொடங்கின.

அன்புமணி உள்ளிட்ட 850 போ் மீது வழக்கு:

போராட்டத்தில் பங்கேற்ற பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ், தலைவா் ஜி.கே.மணி, வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளா் முன்னாள் மத்திய அமைச்சா் ஏ.கே.மூா்த்தி உள்ளிட்ட 850 போ் மீது திருவல்லிக்கேணி போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT