தமிழ்நாடு

டிஎன்சிஎஸ்சி பருவகாலப் பணியாளர்களைப் பணி  நிரந்தரம் செய்ய தொழிற்சங்கம் கோரிக்கை

1st Dec 2020 03:44 PM

ADVERTISEMENT

 

டிஎன்சிஎஸ்சி பருவகாலப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்திட வேண்டுமென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கா.இளவரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 1997ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி அனைத்துத் தொழிற்சங்கங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், கடலூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் இதர டெல்டா மாவட்டங்களில் பணியாற்றிவரும் பருவகாலப் பணியாளர்கள் மூலம் பட்டியல்கள் எழுத்தர்கள், எடையாளர்கள் பணிகளுக்கு அவ்வப்போது ஏற்படும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தது. 

ADVERTISEMENT

இவ்வாறு 2011-ம் ஆண்டு வரை பருவகாலப் பணியாளர்களாக பணிசெய்த அனைவரும் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் 2012ஆம் ஆண்டு முதல் பணியமர்த்தப்பட்டப் பருவகாலப் பணியாளர்களின் பணிமூப்பு விவரங்கள் அனைத்தும் மண்டல அலுவலகத்தால் கடந்த ஆண்டுப் பெறப்பட்டு தகுதி பட்டியலும் தயாரிக்கப்பட்டது. ஆனால் கரோனாத் தொற்றுநோயினைக் காரணம் காட்டி கடந்த ஓரு ஆண்டுகாலமாக அந்த கோப்பின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர பட்டியல் எழுத்தர்கள் மற்றும் எடையாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. இதன் காரணமாக ஊழியர்கள் பற்றாக்குறையினாலும், போதிய ஊழியர்கள் இல்லாத காரணத்தினாலும் பல இடங்களில் பொதுவிநியோகத் திட்டப் பணிகளும், மற்றும் நெல் கொள்முதல் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. 

ஆள் பற்றாக்குறைக் காரணமாக தற்போது பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை உருவாகி அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே மேற்படி அனைத்து சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு, கடந்த 8 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் பணியாற்றி வரும் பருவகால பணியாளர்களை உடனடியாக, காலியாக உள்ள பணியிடங்களில் பணியமர்த்திட தமிழக முதலமைச்ரும், உணவுத்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுத்திடவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT