சென்னை: கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்த புகாரில் கைது செய்யப்பட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்த புகாரின்படி, கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன், செந்தில்வாசன் உள்ளிட்ட நால்வரை காவல்துறையினர் கைது செய்தனர். சுரேந்திரனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சுரேந்திரனின் மனைவி கிருத்திகா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், கலாசாரம், நம்பிக்கை என்ற பெயரில் சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவும், கல்வியறிவின்மை, அறியாமையை ஒழிக்கவும் பல்வேறு தகவல்களை வெளியிட்ட தனது கணவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது, கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. ஒரேயொரு வழக்கு மட்டுமே பதிவு செய்துள்ள நிலையில், குண்டர் சட்டத்தை பயன்படுத்தியது அரசியல் உள்நோக்கம் கொண்டது. அவசரகதியில் கணவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தது இயற்கை நீதிக்கு முரணானது என கோரியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக தமிழக அரசு, சென்னை பெருநகர காவல் ஆணையர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.