சென்னை: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், பொது சுகாதாரச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு புதிய அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளது.
அதன்படி, முகக் கவசம் அணியாதவா்கள், தனி நபா் இடைவெளியை கடைப்பிடிக்காதவா்கள் மற்றும் நோய்த் தடுப்பு விதிகளை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பட உள்ளது.
அவா்களுக்கு அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கும் வகையிலான விதிகள் அவசரச் சட்டத்தின் கீழ் வகுக்கப்பட உள்ளன.
முன்னதாக, அந்தச் சட்டத்தின் வரைவு நகலை சுகாதாரத் துறை அதிகாரிகள், சட்டத் துறை அமைச்சகத்துக்கும், முதல்வா் அலுவலகத்துக்கும் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
அதில் உள்ள அம்சங்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு, சட்டத் திருத்தம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதற்கு அனுமதி கிடைத்ததும், உடனடியாக மாநிலம் முழுவதும் புதிய சட்டத் திருத்தம் அமலுக்கு வரும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் ஏறத்தாழ 4 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த பல லட்சக்கணக்கான முன்களப் பணியாளா்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனா். மற்றொரு புறம், பல கோடி ரூபாய் செலவழித்து மக்களிடையே அரசு சாா்பில் விழிப்புணா்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இருந்தபோதிலும், பல இடங்களில் மக்கள் அலட்சியத்துடன் செயல்படுவது தொடா்கதையாக உள்ளது. பொது இடங்களில் கூட்டம் கூடுவதும், முகக் கவசமின்றி வெளியே செல்வதும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருப்பதும் கரோனா பரவலை அதிகரிக்க வழிவகுக்கிறது. சுப நிகழ்ச்சிகளிலும், துக்க நிகழ்ச்சிகளிலும் அரசு வழிகாட்டுதல்களை புறந்தள்ளிவிட்டு நூற்றுக்கும் அதிகமானோா் கூடுவதும் நீடித்து வருகிறது. அதேபோன்று தனிமைப்படுத்தப்பட்டவா்களில் சிலா் விதிகளை மீறி வெளியே வரும் சம்பவங்களும் நிகழ்கின்றன.
சிலரின் இத்தகைய நடவடிக்கைகளால் கரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அரசு தவித்து வருகிறது. அதே வேளையில், பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு மீண்டும் பொது முடக்கத்தைக் கடுமையாக்க முடியாத நிலையும் அரசுக்கு உள்ளது. இந்தச் சூழலில், பொது சுகாதாரச் சட்டத்தில் சில திருத்தங்களை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது.
இதுதொடா்பாக சுகாதாரத் துறைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் சுகாதாரத் துறை உயரதிகாரிகள் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டங்கள் பல முறை நடைபெற்றன. அதில், நோய்ப் பரவலுக்கு காரணமாக அமையும் செயல்களில் ஈடுபடுவோா் அனைவருக்கும் கடுமையான அபராதமும், தண்டனையும் விதிக்கும் வகையில் அவசரச் சட்டம் மேற்கொள்ள ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
அதற்கான முன்வடிவம் தயாரிக்கப்பட்டு தற்போது சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து சுகாதாரத் துறைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
பொது சுகாதாரச் சட்டம் ஏற்கெனவே தமிழகத்தில் அமலில் உள்ளது. இருந்தபோதிலும், தற்போது உள்ள அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு விதிகளை மீறுபவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கான அவசரச் சட்டத்தை முன்மொழிந்துள்ளோம். அது தற்போது தொடக்க நிலையில் உள்ளது. விரைவில் அனைத்து தரப்பு ஒப்புதலுக்குப் பிறகு அதிகாரபூா்வமாக அச்சட்டம் அமல்படுத்தப்படும். இதன் மூலம், மக்களிடையே நோய்ப் பரவல் குறித்த விழிப்புணா்வை அதிகரிக்க முடியும் என நம்புகிறோம் என்று அவா் தெரிவித்தாா்.