தமிழ்நாடு

மானாமதுரை பகுதியில் கண்மாய் மராமத்துப் பணி: அமைச்சர் ஆய்வு

26th Aug 2020 06:03 PM

ADVERTISEMENT


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் கண்மாய் மராமத்துப் பணிகளை தமிழக காதி கிராமத்தொழில்கள் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மானாமதுரை ஒன்றியத்தில் வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் கால்வாய் தூர்வாரும் பணியை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தொடங்கி வைத்தார். அதன்பின் மாரநாடு, புலவர்சேரி ஆகிய கண்மாய்களில் ரூ 1.80 கோடி திட்ட மதிப்பீட்டில்  நடைபெற்று வரும் பாசனக் கண்மாய், கால்வாய் தூர்வாரும் பணிகளை அமைச்சர் பாஸ்கரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது இக்கண்மாய்கள் மூலம் பலனடையும் விவசாய நிலங்கள், கிராமங்களின் எண்ணிக்கை தற்போதைய பணி நிலவரம் குறித்து அமைச்சரிடம் விளக்கி கூறப்பட்டது. கண்மாய் மராத்துப்பணியின்போது மடைகள் சீரமைத்து கண்மாய் கரையை பலப்படுத்தி பணிகளை தரமாக செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பாஸ்கரன் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து மார்நாடு கருணப்பணசுவாமி கோயிலிலும் தஞ்சாக்கூர் கிராமத்தில் முருகன் கோயிலிலும் அவர் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அமைச்சர் பாஸ்கரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

ADVERTISEMENT

தமிழகம் முழவதும் மாநில அரசு நிதி மூலம் கண்மாய், குளங்கள், ஏரிகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. சிவகங்கை மாவட்டத்திலும் அனைத்து பகுதிகளிலும் இப்பணிகள் நடந்து வருகிறது. குடிமராமத்து திட்டத்தில் மாவட்டம் முழுவதும் பல ஆண்டுகளாக பழுதடைந்து கிடந்த கண்மாய்கள், கால்வாய்கள், மடைகள், ஏரிகள், குளங்கள், ஊரணிகள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

இப்பணியின் ஒருபகுதியாக திட்டப் பணிகளை ஆய்வு செய்து வருகிறோம். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக இப் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக காதி கிராமத்தொழில்கள் துறை மூலம் மானியம் கொடுக்கப்பட்டு  சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட பொருள்கள் தயாரித்து சந்தைப்படுத்துதல் பட்டு வளப்பு தொழிலை ஊக்குவித்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, காரைக்குடி பகுதியில் துறை மூலம் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சிவகங்கை பகுதியிலும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஆய்வின்போது மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நெட்டூர் எஸ்.நாகராஜன், மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், சமூக ஆர்வலர் தஞ்சாக்கூர் பாலசுப்ரமணியம், அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் சிவ சிவ ஸ்ரீதரன் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சுந்தரமகாலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுமீனாள்  மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT