தமிழ்நாடு

பொது முடக்கத்தில் மேலும் தளர்வுகள்: ஆக. 29-இல் மருத்துவ நிபுணர்கள்,  ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

26th Aug 2020 08:22 AM

ADVERTISEMENT

 

சென்னை:  பொது முடக்கத்தில் அடுத்தகட்ட தளர்வுகள், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் ஆகியன தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வரும் 29-ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.

அன்றைய தினம் காலையில் ஆட்சியர்களுடனும், பிற்பகலில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடனும் இந்த ஆலோசனை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டங்களுக்குப் பிறகு, தமிழகத்தில் பொது முடக்கத்தில் அடுத்த கட்ட தளர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று சென்னையைப் போன்றே பிற மாவட்டங்களில் தொடர்ந்து பரவி வருகிறது. இதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வற்ற பொது முடக்கமும், பிற தினங்களில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கமும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இணைய வழி அனுமதிச் சீட்டு, கடைகளை மூடும் நேரம், பொதுப் போக்குவரத்து தொடர்ந்து ரத்து போன்ற கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. 

ADVERTISEMENT

இந்தக் கட்டுப்பாடுகள் வரும் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.
ஆலோசனைக் கூட்டங்கள்: பொது முடக்கக் கட்டுப்பாடுகள் வரும் 31-ஆம் தேதிக்குள் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்தகட்ட நிலை குறித்து முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளார். 

இதற்காக வரும் 29-ஆம் தேதியன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி வழியாக ஆலோசிக்கிறார். அன்றைய தினம் காலையில் ஆட்சியர்களுடன் ஆலோசித்த பிறகு, பிற்பகலில் மருத்துவ நிபுணர் குழுவினருடன் கலந்தாய்வு செய்கிறார்.

அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் பொது முடக்கத்தில் அடுத்த கட்ட தளர்வுகளை அளிப்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. குறிப்பாக, இணையவழி அனுமதிச் சீட்டு, பொதுப் போக்குவரத்தைத் தொடங்குவது போன்றவற்றின் மீது முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்டை மாநிலங்களான கர்நாடகம், புதுச்சேரி, ஆந்திரம் ஆகியவற்றில் இணையவழி அனுமதிச் சீட்டு முறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டுமே இந்த முறை பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT