தமிழ்நாடு

சிகிச்சைக்குச் சென்ற இளைஞர் மரணம்: மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

26th Aug 2020 04:00 PM

ADVERTISEMENT

 

சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குச் சென்ற வாலிபர் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் தவறான சிகிச்சை அளித்ததாகக் கூறி புதன்கிழமை மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் கம்மாளர் தெருவை சேர்ந்தவர் சங்கர்(39). இவர் சொந்தமான வேன் வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சங்கருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உடலில் அரிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் இயங்கி வரும் அனிதா மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். 

இதையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர் சங்கரின் நரம்பில் நான்கு ஊசிகள் போட்டதாக தெரிகிறது. இதையடுத்து அடுத்த சில நிமிடங்களில் சங்கர் வலிப்பு வந்து மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள் சங்கரை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த நிலையில், சுங்குவார்சத்திரம் தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் சங்கர்  மரணமடைந்தார்  எனக் கூறி சங்கரின் உறவினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை காலை தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு, சிகிச்சை அளித்த மருத்துவரை கைது செய்ய வேண்டும், அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என  போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் போராட்டத்தில்  ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். 

இந்த நிலையில் சங்கர் மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்த சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக சங்கரின் உடலை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையிலிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT