திருப்பதி நகர சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ கருணாகரரெட்டிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே செய்தி வெளியிட்டுள்ளார்.
திருப்பதி நகர சட்டமன்ற உறுப்பினர் கருணாகர ரெட்டி கரோனாவை குறித்து மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பணியில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருகிறார். ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, காய்கறி, முட்டை உள்ளிட்டவற்றை வழங்கி வந்த அவர் அதன் பின்னர் சானிடைசர்கள், முககவசங்கள் உள்ளிட்டவற்றை வழங்கும் பணியில் ஈடுபட்டார்.
இந்நிலையில் சில நாட்களாக அவர் கரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்து வீடு திரும்பும் மக்களை அக்கம்பக்கத்தினர் வெறுத்து ஒதுக்கி தனிமைபடுத்துவதால் அவர்களுக்கு ஏற்படும் மனஉளைச்சலை போக்க தானே நேரடியாக சமூக விழிப்புணர்வு பணியில் ஈடுபட தொடங்கினார். மேலும் இறந்தவர்களின் உடல்களில் கரோனா நோய் தொற்று கிருமிகள் சில மணி நேரத்திற்கு மேல் இருக்காது என்பதை நிரூபிக்கவும், கரோனா நோய் தொற்றால் மரணமடைந்தவர்களின் இறுதி சடங்குகளில் தானே முன்வந்து கலந்து கொண்டார்.
இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதால், பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதை அவர் ஒரு செய்தி குறிப்பு மூலம் தெரிவித்ததுடன், திருப்பதியில் உள்ள ரூயா அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தியுள்ள கோவிட் 19 வார்ட்டில் மட்டுமே சிகிச்சை செய்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.