புதுவையில் புதிதாக 511 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,930 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள தகவல்:
புதுவை மாநிலத்தில் புதன்கிழமைகிழமை 1,296 பேரை பரிசோதித்ததில் புதுச்சேரியில் 425 பேருக்கும், காரைக்காலில் 28 பேருக்கும், ஏனாமில் 53 பேருக்கும், மாஹேவில் 5 பேருக்கும் என மொத்தம் 511 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,930 ஆக உயர்ந்துள்ளது.
இதில் புதுவையில் 2,150 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 2,114 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட மொத்தமாக 4,264 பேர் சிகிச்சையில் உள்ளனர்
இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு சதவீதம் 1.51 ஆக உள்ளது.
இதனிடையே 213 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7,486 ஆக அதிகரித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.