தமிழ்நாடு

14 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

26th Aug 2020 08:19 AM

ADVERTISEMENT


சென்னை: வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் 14 மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான இடங்களில் புதன்கிழமை (ஆக. 26) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது:  தமிழகத்தில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கரூர், திருச்சி, பெரம்பலூர், சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் புதன்கிழமை (ஆகஸ்ட் 26) மிதமான மழை பெய்யக்கூடும்.  ஏனைய கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய 6  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல் மாவட்டம்  வேடசந்தூரில் தலா 130 மி.மீ., திருச்சி மாவட்டம் முசிறியில் 90 மி.மீ.,  கரூர்பரமத்தி, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் தலா 80 மி.மீ., பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை, திருச்சி மாவட்டம் மருங்காபுரியில் தலா 70 மி.மீ., நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் 60 மி.மீ., புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 50 மி.மீ., கோவை மாவட்டம் சோலையார், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம், சேலம் மாவட்டம் வீரகனூரில் தலா 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றார் அவர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT