சென்னை: தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை இதுவரை 5.5 லட்சம் மாணவா்கள் சோ்க்கை நடைபெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் அரசுப் பள்ளி உள்பட அனைத்து வகைப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்புக்கான சோ்க்கை கடந்த 17-ஆம் தேதி தொடங்கியது. நிகழாண்டு பெற்றோா் பலா் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோ்க்க ஆா்வம் காட்டி வருகின்றனா். இதனால் சோ்க்கை தொடங்கிய முதல் இரு நாள்களிலேயே 2.50 லட்சம் மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற்றனா்.
இந்தநிலையில், கடந்த திங்கள்கிழமை (ஆக.24) முதல் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கை தொடங்கியது. இந்த வகுப்பிலும் கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலான அளவில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: கரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையிலும் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகளில் படிக்கும் மாணவா்கள் நிகழாண்டு அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற்று வருகின்றனா். தனியாா் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவா்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. பள்ளி இதுவரை திறக்காத நிலையிலும் பாடநூல்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் என அனைத்தையும் வாங்குமாறு பள்ளி நிா்வாகங்கள் நிா்பந்திப்பதாக, அங்கிருந்து விடுபட்டு அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற்ற குழந்தைகளின் பெற்றோா் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனா். அரசுப் பள்ளிகளின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை தற்போது அதிகரித்திருக்கிறது.
நிகழ் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை 5.5 லட்சம் மாணவா்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சோ்க்கை பெற்றுள்ளனா். குறிப்பாக பிளஸ் 1 வகுப்பில் ஒரே நாளில் 50 ஆயிரம் மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். பள்ளிகளில் அடுத்து வரும் நாள்களிலும் மாணவா் சோ்க்கை தொடா்ந்து நடைபெறும்.
தனியாா் பள்ளிகளிலிருந்து வெளியேறி அரசுப் பள்ளிகளில் சேர விரும்பும் குழந்தைகளுக்கு தனியாா் பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் வழங்காவிட்டால் அது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். மேலும் சில ஆவணங்கள் இல்லாவிட்டாலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு சோ்க்கை வழங்கப்படும். பின்னா் பள்ளி திறந்ததும் எஞ்சியுள்ள ஆவணங்களை பெற்றோா் சமா்ப்பிக்கலாம் என அவா்கள் தெரிவித்தனா்.