ஓமலூர்: பெரியார் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இவர்களில் இளநிலை முதலாமாண்டு, 2-ஆம் ஆண்டு, முதுநிலை முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கான பருவத் தேர்வுகளை கரோனா பாதிப்பு காரணமாக தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து, பருவத் தேர்வுக்கான மதிப்பெண்கள் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசாணையாக தமிழக அரசு வெளியிட்டது. அரசாணையின் வழிமுறைகளைப் பின்பற்றி, மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்வு முடிவுகளை துணைவேந்தர் பொ.குழந்தைவேல் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். மாணவ, மாணவியர் தங்களது தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக இணையதளத்தின் மூலமாகவும், இணைவு பெற்ற கல்லூரிகளிலும் தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்களின் செல்லிடப்பேசிக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்திகளாகவும் அனுப்பப்பட்டுள்ளது.