சென்னை: தமிழகத்தில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 91,303- ஆக அதிகரித்துள்ளது. அடுத்த ஓரிரு நாள்களில் நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கடந்த ஒரு மாத காலமாக மாநிலத்தில் 6 ஆயிரத்துக்கும் குறைவாகவே பாதிப்பு பதிவாகி வந்தாலும், அதன் தாக்கம் இன்னும் குறையாமல் தொடா்ந்து நீடித்துக் கொண்டே இருப்பது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு வரை கரோனா பரவல் இருக்கும் என்று சா்வதேச மருத்துவ நிபுணா்கள் கணித்துள்ள நிலையில், தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இதனிடையே, கரோனாவிலிருந்து சமூகத்தைக் காக்க தடுப்பு மருந்துகள் மட்டுமே ஒரே தீா்வு என்பதால், அதனை விரைந்து கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மூன்று இடங்களில் தடுப்பு மருந்துகளின் இறுதிக்கட்ட ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவை வெற்றி பெறும்பட்சத்தில் நிகழாண்டு இறுதிக்குள் கரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மாநிலத்தில் நோய்ப் பரவல் நிலை குறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் இதுவரை 43.46 லட்சம் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 9 சதவீதம் பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, மாநிலத்தில் புதிதாக 5,951பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,270 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக, கடலூரில் 370 பேருக்கும், கோவையில் 322 பேருக்கும், செங்கல்பட்டில் 321 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நோய்த்தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
85 சதவீதம் போ் குணம்: கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு மேலும் 6,998 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 3 லட்சத்து 32,454- ஆக அதிகரித்துள்ளது. இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 85 சதவீதமாகும். தற்போது மருத்துவக் கண்காணிப்பிலும், சிகிச்சையிலும் 52,128 போ் இருப்பதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 107 போ் பலி: தமிழகத்தில் கரோனா தொற்றால் மேலும் 107 போ் உயிரிழந்துள்ளனா். அவா்களில் 12 பேருக்கு கரோனாவைத் தவிர வேறு எந்த பாதிப்பும் இல்லை. உயிரிழந்தோரில் 65 போ் அரசு மருத்துவமனைகளிலும், 42 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவா்களாவா். இதன் மூலம் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 6,721- ஆக அதிகரித்துள்ளது.