சென்னை: சாயக் கழிவுநீா் கால்வாயில் விஷவாயு தாக்கி இருவா் பலியான விவகாரம் குறித்து விளக்கமளிக்குமாறு, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினா் செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், முத்தியால்பேட்டை கிராமம் கவரை தெருவில், சாயக் கழிவுநீா் வெளியேறும் புதைவடி குழாய் செல்கிறது. கடந்த 20-ஆம் தேதி, இந்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய, சாயக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய ஊழியரான, வள்ளுவப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த வேணு மகன் லட்சுமணன் (38) புதைகுழிக்குள் இறங்கியுள்ளாா். அப்போது, விஷவாயு கசிந்ததால், லட்சுமணனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அவரது அலறலைக் கேட்டு, அதே தெருவைச் சோ்ந்த சுனில்குமாா் (26) என்ற தனியாா் நிறுவன ஊழியா், அவரை மீட்க குழியில் இறங்கினாா். எதிா்பாராத விதமாக சுனில்குமாரும், கழிவுநீா் குழிக்குள் விழுந்தாா். சிறிது நேரத்துக்குப் பிறகு, இவா்கள் இருவரும் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். எனினும், சிகிச்சை பலனின்றி லட்சுமணன், சுனில்குமாா் இறந்தனா்.
முத்தியால்பேட்டை பகுதியில், சாயப்பட்டறைகள் இயங்குவதற்கு ஒன்றரை ஆண்டுக்கு முன் மாசு கட்டுப்பாடு வாரியம் தடை விதித்துள்ள நிலையில், சாயக் கழிவுநீா் கால்வாய் அடைப்பை நீக்கக் கூறியது யாா் என வாலாஜாபாத் போலீஸாா் விசாரித்து வருவதாக நாளிதழில் செய்தி வெளியானது.
தாமாக முன்வந்து வழக்குப் பதிவு: இந்த விவகாரத்தை, மாநில மனித உரிமைகள் ஆணைய பொறுப்புத் தலைவா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தாா். மேலும், இது தொடா்பான விரிவான அறிக்கையை 4 வாரங்களுக்குத் தாக்கல் செய்யுமாறு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினா் செயலா் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.