புதுச்சேரி அரசு போல் உடனடியாக இ-பாஸ் நடைமுறையை இன்றே ரத்து செய்திட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் 49.8 சதவீதமாக அதிகரித்து - தேசிய சராசரியான 23.5 சதவீதத்தை விட இரட்டிப்பாகி வரலாறு காணாத வகையில் வானுயரப் பறந்து கொண்டிருக்கிறது என்பது பேரதிர்ச்சியளிக்கிறது. கடந்த டிசம்பர் 2019-லிருந்த வேலைவாய்ப்பின்மை, தற்போது 10 மடங்காக உயர்ந்து, இளைஞர்களின் எதிர்காலக் கனவுகளைச் சிதைத்து - நம்பிக்கையை நாசம் செய்து விட்டது.
தமிழக அரசின், 'பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை' மற்றும் 'மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ்' ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில், மார்ச் முதல் மே வரையிலான மூன்று மாதத்தில் மட்டும், தமிழ்நாட்டில் சராசரியாக 53 சதவீத வீடுகளில் தலா ஒருவர் வேலை இழந்திருக்கும் கொடுமை அம்பலமாகியிருக்கிறது. நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற வித்தியாசம் இன்றி, கிராமப்புறங்களில் 56 சதவீதம் குடும்பங்களிலும், நகர்ப்புறங்களில் 50 சதவீத குடும்பங்களிலும் இந்த வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஆய்வு முடிவில் வெளிவந்திருக்கிறது.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் வாழ்வாதாரத்தை - இழந்துவிட்ட வேலைவாய்ப்பை மீட்டிடப் புதுச்சேரி அரசு போல் உடனடியாக இ-பாஸ் நடைமுறையை இன்றே ரத்து செய்திட வேண்டும் என்றும்; ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேரடியாக 5000 ரூபாய் நிதி அளித்திட வேண்டும் என்றும்; உலக முதலீட்டாளர் மாநாடுகள், வெளிநாடு சுற்றுலா மற்றும் கொரோனா காலத்தில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன, எவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறித்து, தமிழக மக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக, உடனடியாக ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும்; கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.