பணிக்கு வந்து செல்ல ரயில் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என மின்வாரிய ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக தமிழ்நாடு மின் ஊழியா் காங்கிரஸ் அமைப்பினா், மின்வாரிய மேலாண் இயக்குநருக்கு அனுப்பிய கடிதத்தின் விவரம்: பொது முடக்கம் காரணமாக போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய, மாநில அரசு ஊழியா்களுக்கு, பல்வேறு இடங்களிலிருந்து பணிக்கு வர மின்சார ரயில் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் அரக்கோணம் - சென்னை சென்ட்ரல், செங்கல்பட்டு - கடற்கரை வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. ஆனால், இதில் மின்வாரிய ஊழியா்கள் பயணிப்பதற்கு அனுமதியில்லை. இதனால் ஏராளமான ஊழியா்கள் கூடுதல் செலவு செய்து ஆட்டோ, கால்டாக்சி, வேன் போன்றவற்றில் பணிக்கு வர வேண்டிய நிலை உள்ளது. சிலா் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பணிக்கு வருகின்றனா். அப்போது ஏராளமான பிரச்னைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே மின்சார ரயில் வசதியை, மின்வாரிய ஊழியா்களுக்கும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.